என் மலர்
பெரம்பலூர்
- பரவாய் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- தீயணைப்பு வீரர்கள் மீட்ட உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமூர்த்தி(வயது 74). இவர் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமூர்த்தி நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த உறவினர்கள் திருமூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை காணாமல்போன திருமூர்த்தி வயல் அருகே குமரசாமி என்பவரது வயலில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் திருமூர்த்தியின் செருப்பு மற்றும் துண்டு, சட்டை கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது திருமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சுமணி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் திருமூர்த்தி வயலுக்கு வரும்போது தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி பாட்டிலில் தண்ணீர் எடுப்பாராம். அதேபோல் தான் பாட்டிலில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.
- பெரம்பலூர் விவசாயி வீட்டு பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
- கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்(வயது 55). விவசாயியான இவர் கடந்த 27-ந் தேதி பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவயலூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அந்த ஊரை சேர்ந்த தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் ரங்கராஜ் வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நேற்று காலை பார்க்கும்போது ரங்கராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.இதுகுறித்து உடனே அவர் ரங்கராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் நேற்று காலை 6 மணி அளவில் ரங்கராஜ் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ஆகியவை கொள்ளைபோய் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர் உடனே பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாசலம் தலைமை நடந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.இதில் மாவட்ட அவைத்தலைவர் குணசீலன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், கருணாநிதி, டாக்டர் நவாப்ஜான், குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், துறைமங்கலம் சந்திரமோகன், வக்கீல் ராமசாமி, கீழப்புலியூர் நடராஜன், மருவத்தூர் வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
- விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது
- பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.கவுள்பாளையத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு வளாகத்தில் 504 வீடுகள் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பொழுதுபோக்கிற்காக பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி விளையாட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.பூஜை விழா நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் உத்திரக்குமார் தலைவர் வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டார். இதில் துணைத் தலைவர் செங்கமலை, துணை செயலாளர்முருகையா மற்றும் உதிரம் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது
- கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழா உடன் தொடங்கி 13 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினமும் கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மாரியம்மன் திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள், பொங்கல், மாவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேளதாள, வாணவேடிக்கை முழங்க, மாரியம்மன் எழுந்தருளிய திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தின் போது, திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
- பெரம்பலூர் பகுதியில் சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
- இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்வோர் அதிகம் உள்ளனர். தற்போது அதற்கான பருவகாலம் என்பதால் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் முதலில் வயலை நன்கு உழுது இயற்கை உரமான எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் இட்ட பின்னரே விதை வெங்காயத்தை வயலில் நடவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்;
பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் நேற்று காலை 6.15 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்து கொண்டிருந்த ஆண் உடலை பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் இருந்து இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஏரியில் பிணமாக மிதந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மதியழகன் (வயது 29) என்பது தெரியவந்தது.
மதியழகன் அதிக மது போதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநலம் சரியில்லாதவர்போல் நடந்து கொண்ட காரணத்தால் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 24-ந் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மதியழகன் தப்பித்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மதியழகன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மதியழகன் நேற்று காலை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மதியழகன் இறந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியழகன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன
. இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
- போலீசாா்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி விஜயா(வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இரவில் விஜயா இயற்கை உபாதை கழிப்பதற்காக நொச்சியத்தில் இருந்து சிறுவாச்சூருக்கு செல்லும் குறுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நொச்சியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார்.
அந்த டிராக்டர் பின்னால் உள்ள டிப்பரில் (பெட்டி) திறந்த நிலையில் இருந்த கதவு சாலையோரம் நின்று கொண்டிருந்த விஜயா மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயாவின் மகன் செல்வராசு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசாா் டிராக்டர் டிரைவர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில், நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஆம்புலன்ஸ் நிர்
வாகம் உடனடியாக பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். தற்பொழுது வழங்கப்பட்ட பணி வரையறை அட்டவணைப்படி தொழிலாளர்களை அழைக்கழிக்காமல் நாளுக்கு ஒரு லொகேஷன் என்று மாறி மாறி பணி வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது கடைசி நேரத்தில் எந்த இடத்தில் பணி என்பதை கூறாமல், உரிய நேரத்தில் பணி மாவட்ட அதிகாரிகளால் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.