என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எனது கேள்விகளுக்கு விஜய் பதில் சொல்லாதது ஏன்?- சீமான்
    X

    எனது கேள்விகளுக்கு விஜய் பதில் சொல்லாதது ஏன்?- சீமான்

    • நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
    • நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.

    தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

    ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.

    தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.

    பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.

    நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.

    அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.

    விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.

    நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.

    ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×