என் மலர்
நீங்கள் தேடியது "மின் கட்டணம்"
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார்.
- மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி.
இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து அவர் தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்றபோது, அதில் காட்டப்பட்ட தொகையை கண்டு மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அதில் மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? என அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்குள் இந்த தவறு சரிசெய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும்.
மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
- மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?
புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடைபெற்று வருகிறது.
மக்களவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொடு வருகிறார்.
அங்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு பேசியதாவது:-
இரவு, பகல் பாராமல் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால் தான் ரகுபதிக்கு பதவி வழங்கப்பட்டது.
அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
அதிமுக கொடுத்த அடையாளத்தை வைத்து தானே மாற்றுக் கட்சிக்கு சென்றார் ரகுபதி. மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. என் வீட்டிற்கு ரூ.4,000 என்று வந்த மின்கட்டணம் தற்போது ரூ.12,000 வரை வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.
- கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது.
சென்னை:
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பலவகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது. இந்த கட்டணம் ஒருமுறை செலுத்தக்கூடியதாகும்.
இந்த நிலையில் மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் பல்வேறு வகை கட்டணங்களையும் 3.16 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு முனை பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,070-ல் இருந்து, ரூ.1,105 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும் உயர்ந்துள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,095 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.215-ல் இருந்து ரூ.220 ஆகவும், வைப்புத்தொகை ரூ.320-ல் இருந்து ரூ.330 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேபோல் மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில் வளர்ச்சி கட்டணம் மட்டும், தரைக்கு அடியில் மின் வினியோகம் செய்யும் இடம் மற்றும் மின் கம்பம் வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடம் என தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர தாழ்வழுத்த பிரிவில் வீடுகளில் தீயில் எரிந்த சேதமடைந்த மீட்டரை மாற்றும் கட்டணம் ரூ.1,070-ல் இருந்து ரூ.1,105 ஆகவும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.645-ல் இருந்து ரூ.665 ஆகவும் அதிகரித்துள்ளன. இதேபோல் பல சேவைகளின் கட்டணங்கள் தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த பிரிவுகளில் தனித்தனியே உயர்த்தப்பட்டு உள்ளன.
வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டண உயர்வும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது வீடு கட்டுபவர்கள் புதிய தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது. அது தற்போது ரூ.2,215 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மின் பயன்பாடு வைப்பு தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.1,990 ஆகவும், வளர்ச்சி கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.11,050 ஆகவும், மின் இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1,660 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.220 ஆகவும் அதிகரித்து உள்ளது. மொத்த கட்டணம் ரூ.9050-ல் இருந்து ரூ.17,135 ஆகவும் 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
- வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தின் வரலாற்றில் 3 ஆண்டுகளில் 4 முறை மொத்தம் சுமார் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மனிதநேயமற்ற அரசு திராவிட மாடல் அரசு தான். வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு அறிவித்திருப்பது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால் தான்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023-ம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட்டு, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, பின்தேதியிட்டு வீடுகளுக்கும் சேர்த்து மின்கட்டணத்தை உயர்த்தியவர்கள் தான் என்பதை தமிழ்நாடு மறக்கவில்லை. எனவே, வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத் துடிப்பது சரியல்ல.
எனவே, வணிகம் மற்றும் தொழில்துறையினரை பாதுகாக்கும் வகையில் வீடுகளுக்கு மட்டுமின்றி, கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- முத்துபாண்டியன் என்பவர் 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பி.திருவேங்கிடபுரம் கிராமத்தில் ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்துபாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் நிலுவைத் மின்கட்டண தொகையாக ரூ.26 ஆயிரத்து 765 இருந்துள்ளது. அதோடு கடந்த மாதத்திற்காண மின் கட்டண தொகை ரூ.22,233 தொகையை செலுத்த வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கடந்த மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே நிலவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான ரூ.49 ஆயிரத்து 719-ஐ அவர் செலுத்தியுள்ளார். கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே மின்வாரிய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மின் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழிப் பண்ணைக்கு வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த ஏ.சி. செயல்படாமலும், வெப்பம் தாங்காமலும் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தது. இதைக் கண்டு நிலைகுலைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் செல்லமுத்து பாண்டியன் செய்வதறியாது திகைத்து நின்றார்.
நிலுவைக் கட்டணத்தை இன்னும் 10 நாட்களில் கோழி விற்பனையானதும் செலுத்துவதாக ஏற்கனவே மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுத்து இருந்ததாகவும், தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடாதீர்கள். அவ்வாறு துண்டித்தால் சிறிது நேரத்திலேயே வெப்பம் தாங்காமல் கோழிகள் இறந்து பெரும் இழப்பு ஏற்படும் என ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் தனது நிலையை கருத்தில் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி நிலுவைத் தொகை கட்டணம் செலுத்த வேண்டியதை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டித்தது விட்டதாக கூறி புலம்பினார்.
இதனால் தனக்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாவும், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் தனக்கு அரசு கருணை அடிப்படையில் உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் கதறி அழும் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
- இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.
மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.
- தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வசூலித்து வருகிறது.
குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. பின்னா் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்திய பிறகு மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தனது தோ்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி நடந்து முடிந்தவுடன் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதியளித்தாா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது. தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்ட பகுதிகளில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. அந்த வீடுகளுக்கு முதலில் பரீட்சார்த்தமான முறையில் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. எனவே வருகிற ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு வீடுகளுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
- மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
திருப்பூர் :
மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
- குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
- கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
- சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.
திருப்பூர்:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூரை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள், தொழில்துறை சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சர், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எவ்வித கட்டண குறைப்பும் இல்லாமல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய மின் கட்டணத்தை பார்த்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறு, குறு தொழில் முனைவோர் கூறியதாவது:-
பெரிய நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுடன் சேர்ந்து போராடி அரசிடம் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், 'ஜாப் ஒர்க்' மற்றும் கூலி அடிப்படையில் வேலை செய்யும் சிறு நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.
மின் கட்டண உயர்வால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு தொழில்துறையினரையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாரதிய கைத்தறி சங்க மாநில தலைவர் ஸ்ரீபாபுலால் பேசுகையில், ''பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும், 15 ஆண்டுகளில் கைத்தறி துணிகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
- முகமது பாத்து அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
- வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது.
வள்ளியூர் :
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து (வயது40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்றும், இதற்கு வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது, வழக்கமாக எனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்டணம் வரும். வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் மின்வாரியம் சார்பில் முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார்.
- மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
- பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை :
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.
பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.
இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






