என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity tariff"

    • கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
    • தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது.
    • TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா?

    மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் எண்ணமிருந்தால் திமுக அரசு அதைக் கைவிடவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதத்திலிருந்து உயர்த்தப்போவதாக தி ஹிந்து தமிழ்திசை நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி, சாமானிய மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இது உண்மையான தகவலாக இருப்பின், திமுக அரசின் இந்த முடிவானது கடும் கண்டனத்திற்குரியது!

    எதிர்க்கட்சியாக இருக்கையில் "தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்" என பட்டி தொட்டியெல்லாம் பரப்புரை செய்த திரு. ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஜூன் 2023, ஜூன் 2024 என இந்த இருண்ட திமுக ஆட்சியில் வருடாவருடம் உயர்த்தப்பட்டு வரும் மின்கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா?

    செயல் திறன் அதிகரித்தல், பெரிய வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூலித்தல், மற்றும் கசிவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா?

    ஏற்கனவே திமுக-வின் திறனற்ற ஆட்சியில் படாத பாடு படும் தமிழக மக்கள் தொடர விலையேற்றங்களாலும் வரி உயர்வினாலும் தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு வாழ வழி தெரியாமல் நிற்க வேண்டுமா? வாக்களித்த மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கையாக கொண்ட திமுக அரசு, தாம் என்ன செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறதா?

    2021 தேர்தலின் போது, "மாதக் கணக்கெடுப்பு முறையை பின்பற்றி மக்களின் மின் கட்டண சுமையை குறைப்போம் மற்றும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் போன்ற திமுக வின் போலி வாக்குறுதிளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது மற்றும் தற்சார்பு மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் தனியாரை நம்பி தமிழகத்தைக் கடன் சுமையில் தத்தளிக்க விட்டது இவை நான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள்.

    இப்படி மின்கட்டண உயர்வு ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால், ஆவின் பால் விலை, சொத்து வரி (25% 150% உயர்வு), சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், கட்டிட அனுமதிக்கான கட்டணம், தொழில்முறை வரி என திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மற்ற விலைவாசிகளும் வரி உயர்வும் மக்களை விழி பிதுங்க வைக்கிறது.

    வேடிக்கையான உண்மை என்னவென்றால், இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு, டாஸ்மாக் கொழுத்தது மட்டுமல்லாமல், அதில் ஆட்சியாளர்களும் கொழுத்தார்கள் என இப்பொழுது எழுந்திருக்கும் ரூ. 1000 கோடி டாஸ்மாக் மோசடி செய்தி சுட்டிக்காட்டுகிறது.

    ஆகவே, மறுபடியும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட முடிவை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மீறி, விலையேற்றமானது அமலுக்கு வந்தால், மிகப்பெரிய போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.

    2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.

    2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
    • இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.

    நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.

    மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.

    இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.

    தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக அரசு சமீபத்தில் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    'இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மது கடைகளை மூடுவதாக மக்களிடம் தெரிவித்து மது கடைகளை மூடினால் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல், அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

    • ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வறட்சி காரணமாக வேளாண்மை பாதிப்பு, மக்களின் வருவாய்க் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் 2.18% உயர்த்தப்பட்டது. அப்போது பொதுமக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் மட்டும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல. 2022-ஆம் ஆண்டில் ரூ.31,500 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியும் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது.

    எனவே, கட்டண உயர்வால் பயன் இல்லை. மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது.
    • ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது. இதனால், ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    இந்தச் சுமையிலிருந்து பொது மக்கள் மீண்டு வருவதற்குள்ளாக, மேலும் ஒரு நிதிச்சுமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஊட்டி

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,

    அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,

    ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு மீது கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேசினார்.
    • தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    மின் கட்டணத்தை உயர்த்தி திமுக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது, பஞ்சாப் மாநிலத்தில் 15,000 கோடியளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, உத்தப்பிரதேசத்தில் 22,000 கோடி அளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கடந்த 8ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, தற்போது திமுகஅரசு மானியம் வழங்காமல் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது,

    இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்குதான் வாக்களித்தோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் நினைத்தோம் என்றுமக்கள் கூறினார்கள், ஆனால் பெட்டியை மாற்றி விட்டார்களா? என்று தெரியவில்லை, ஆனாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை இன்றைக்கு மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்து வருகிறோம்,

    முதலமைச்சர் தொடர்ந்து 10 நாட்களாக மதுரைக்கு வருகிறார் அண்ணன் கோட்டையை பிடித்து விடுவோமா என்று நினைக்கிறார், தென் மாவட்டத்தை விட்டு விடுங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்,

    தென் மண்டல சிறு குறு தொழில் நிறுவனங்களில் மாநாடு முதலமைச்சர் தலைமையில் இன்று மதுரையில் நடைபெ ற்றுள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்,

    மின்கட்டணம் உயரால் மக்கள் கொந்தளித்து உள்ளனர் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதலமைச்சராக அதிமுக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×