என் மலர்
நீங்கள் தேடியது "மின் இணைப்பு"
- 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவிலுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டிடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை விகிதம் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் நியாய வாடகை உயர்வான 33.3 சதவீதத்தினை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கலாம் என்றும், இந்த வாடகை விகிதத்தை 2001-ம் ஆண்டு நில மதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இது வாடகை செலுத்துவோருக்கு மிகவும் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2007 மற்றும் 2010 ல் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசு அறிவித்த அரசாணைகள் படி, கோவில் நிலம் சம்பந்தமாக அறிவுறுத்திய வாடகையை தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற கோவில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும் தமிழக அரசு சென்னை மவுண்ட் ரோடு பச்சை அம்மன் கோவில் நிலத்தில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி கோவில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்து குடியிருப்போரின் பெயரிலேயே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
- மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.
சென்னையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வடபழனி என பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்டர்களில் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.
மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் மின் கட்டண அட்டை, ஆதார் அட்டை, ஓ.டி.பி. வருவதற்கான செல்போன் ஆகியவற்றை கையோடு கொண்டு வர வேண்டும். சிலர் வீடுகளில் மற்றவர்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கொடுத்து ஓ.டி.பி.-க்காக அவர்களிடம் போன் செய்து கேட்டு சொல்வதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
ஓ.டி.பி. அனுப்ப பயன்படுத்தும் செல்போன்களை முகாமுக்கு எடுத்து வந்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும்.
மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் தற்போது கூடுதல் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
- திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
வீட்டு மின் இணைப்பு, விவசாயம், குடிசை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில் செய்வோர், மின்வாரியத்தின் மானியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்ந்த மின் இணைப்புகள்போக, 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க திருப்பூர் கோட்ட மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்படி மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு 'கவுன்டர்கள்' திறக்கப்பட்டு பண்டிகை நாள் விடுமுறை தவிர்த்து, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து திருப்பூர் கோட்ட மின்வாரிய கண்காணப்பு பொறியாளர் ராஜகுமாரி (கூடுதல் பொறுப்பு) கூறுகையில், திருப்பூர் கோட்டத்தில் 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய சூழலில் இதுவரை 40 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே இணைத்துக் கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மின்வாரிய அலுவலகம்சென்று இணைத்து கொள்கின்றனர். மக்களிடம் எவ்வித தயக்கமும் இல்லை என்றார்.
சிறப்பு கவுன்டர்களில்ஆதார் இணைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கூறுகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசின் எந்தவொரு சலுகையும் ரத்தாகாது என மின்துறை அமைச்சர் தெளிவுப் படுத்தியதை தொடர்ந்து அச்சம், தயக்கமின்றி இணைப்பு பணி மேற்கொள்கின்றனர் என்றனர்.
- மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
- சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது.
சென்னை:
தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் மற்றும் விசைத்தறி பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது.
இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது. மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று வரை 54 லட்சத்து 55 ஆயிரம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2811 சிறப்பு கவுண்டர்கள் மூலம் 83 ஆயிரமும், ஆன்லைன் வழியாக 1.55 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் 54 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளன.
- கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது.
அவினாசி:
இடி, மின்னல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பழுது காரணமாக விபத்து நேரிடுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைத்து மின்நுகர்வோரும் ஆர்.சி.டி., எனப்படும் உபகரணத்தை அவரவர் மின் இணைப்பில் பொருத்திக் கொண்டால் விபத்து தவிர்க்க முடியும் என தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட மின்வாரியத்தினர் கூறியதாவது:-
மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மின் கசிவு மற்றும் மின் பழுதால் மின் விபத்து நேரிடுவது தொடர்வதால் அந்த உபகரணத்தை காட்டிலும் கூடுதல் பலன் தரும் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ளும் போது மின் கசிவு மற்றும் மின் பழுதின் போது மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக அந்த மின் இணைப்பு தாங்கிய மீட்டர் செயலிழக்கும் (டிரிப்). இதனால் காயம், உயிர் சேதம் ஏற்படாது.
புதிதாக மின் இணைப்பு வாங்குவோர் உட்பட அனைவரும் கட்டாயம் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சந்தையில் ஒருமுனை இணைப்புக்கான ஆர்.சி.டி., உபகரணம் 800 முதல் 1,200 ரூபாய், மும்முனை மின் இணைப்புக்கான ஆர்.சி.டி., 2,500 முதல் 2,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு மின்வாரியத்தினர் கூறினர்.கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் கூடுதலாக 4 வணிக வளாகங்களிலும் இந்த சிறப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
சென்னையை பொறுத்தவரை இதற்காக 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டிருக்கிறது. தலைமை செயலகத்திலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளில் 1.03 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
வருகிற 31-ந்தேதி வரை எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்று பார்க்கப்படும். அதன்பிறகு முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அவரது ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் முடிவு எடுத்து அனுமதி வழங்குவார்கள்.
31-ந்தேதிக்குள் இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பதற்காக என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டாம். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக, மிக நேர்த்தியாக விரைவாக பணிகள் நடைபெறுகிறது.
25-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று ஒருநாள் மட்டும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இருக்காது. மீதி இருக்கும் விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும்.
தமிழகத்தில் நகர் பகுதிகளில் ஒரு கோட்டத்துக்கு 18200 மின் இணைப்புகள் இருக்க வேண்டும். கிராம பகுதிகளில் 140 மின்மாற்றிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான நகர்ப்புற கோட்டங்களில் 16 ஆயிரம் மின் இணைப்புகளும், கிராமப்புற கோட்டங்களில் 130 மின் மாற்றிகளும் உள்ளன.
தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கோட்டங்களில் அதிகமாக இணைப்புகள் உள்ளன. எனவே அங்கு தொழிலாளர்களிடம் கருத்து கேட்டு அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ப புதிய கோட்டங்கள் தொடங்கப்படும்.
மின் வாரியத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் தொழிற் சங்கத்தை கேட்டுத்தான் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அவர்களின் கோரிக்கை சரியானதா என்று பார்க்கப்படும். பேச்சுவார்த்தை நடக்கும் போதே மின் ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல.
மின் வாரியத்தில் இருக்கும் கடனுக்கு வட்டி கட்டுவது என்பது குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எந்தெந்த செலவினங்கள் கூடுதலாக இருந்தது. எதையெல்லாம் சீரமைக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு தான் மின் வாரியம் இந்த மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் ஆதார் எண் இணைக்கக் கூடிய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மின்துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது.
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா? மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா? என மின் நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது.
மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 1.09 கோடி பேர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
- 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.
சென்னை:
இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.
கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.
ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.
இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது.
- நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல் போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.
மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.
அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 25 லட்சம் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 70 லட்சம் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஏற்கனவே டிச.31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
இன்னும் 2 நாள் கழித்து எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து கணக்கிட உள்ளோம். அதன் பிறகு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கலந்து பேசி கால நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
- அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
- சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார். இது தொடர்பாக கூனிமேடு கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், போலியாக ரப்பர் ஸ்டாம்ப் சீல் செய்து, சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகீம் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கூனிமேடு, செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக புதுச்சேரியில் தலைமறைவாகியுள்ள 2 பேரையும் போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதி பர பரப்பாக காணப்படுகிறது.
- நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
- வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
மேலும் நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் பிரத்தியேகமாக உள்ள வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட செல் போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
நாகை - 9445853931, வெளிப்பாளையம்-9445853933, நாகூர் - 9445853934, திருமருகல்-9445853931, கங்களாஞ்சேரி- 9445853935, சிக்கல்-9445853940, வேளாங்கண்ணி- 9445853938, கீழ்வேளூர் -– 9448583936, திருக்குவளை- –9445853937, திருப்பூண்டி- –9445853939, வேதாரண்யம்-–9445853941, வாய்மேடு-9445853942, கரியா பட்டினம்- –9445853943, விழுந்தமாவடி- –9445853944 ஆகிய செல்போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மின் நுகர்வோர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி ஆதார் எண்களை இணைத்து வருகிற 31-ந் தேதிக்குள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.