என் மலர்
நீங்கள் தேடியது "Aadhaar Card"
- அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான்கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு அதனை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவில் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. அல்லது ஆதார் இணையதளத்தில் உள்ள ஆதார் 'பிடிஎப்' பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் அல்லது இணையதளம் இல்லாத சூழலில் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால், நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரம் முறை செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும்.
நாம் இனி செல்போன் எண் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதுமானது அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது.
இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின் டிஜிட்டல் பாஸ்வேர்டு, ஆதார் பயோ மெட்ரிக்கை லாக் செய்யவும், ஆன் செய்யவும் வசதிகள் ஆகியவையும் உள்ளன. இணையதள வசதிகள் இல்லாத நேரங்களில் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த புதிய செயலி, ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வழியை திறந்து இருக்கிறது.
- இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
- புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.
நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.
புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுகிறது.
- ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், 7 முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண தள்ளுபடி கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்ததாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டண உயர்வு தொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
- கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும்.
சென்னை:
ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயருகிறது. அதேபோல் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.
- நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என ஆணையம் தெரிவித்திருந்தது.
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 1 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என ஆணையம் தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வார தொடங்கில் இந்த வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
- ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம்
இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து, 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கபட்டுள்ளது. .
இறந்தவர்களின் ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் UIDAI தெரிவித்துள்ளது.
- 5 வயதுக்குட்பட்ட காலத்தில் ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
- பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ஆதார் ஆணையம் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
புதுடெல்லி:
5 வயதுக்கு உட்பட்ட காலத்தில் ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதை கடந்த பிறகு ஆதாரில் உள்ள அவர்களின் கைரேகைகள், கருவிழி பதிவு விவரங்களை (பயோமெட்ரிக்) புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களது ஆதார் செயல் இழந்துவிடும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு ஆதார் ஆணையம் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது.
- டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
பெரும்பாலான பயணிகள் நீண்டதூர பயணத்துக்கு ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறைந்த கட்டணம், பயணம் செய்வதில் கூடுதல் வசதி உள்ளிட்டவற்றால் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே சமீபகாலமாக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நாட்க ளிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடுகிறது.
மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பே சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ரெயில்வே தங்குமிடங்கள், பயணம் உள்ளிட்டவற்றிற்கு போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ரெயில்வே தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட் சரிபார்ப்பு அலுவலர்கள் பயணிகளின் ஆதார் அட்டையை கவனமாக சரிபார்க்க ரெயில்வே அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது.
பயணிகளின் ஆதார் அட்டையை "எம்ஆதார்" எனப்படும் ரியல்டைம் அப்ளிகேஷனை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் வேண்டும், அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ரெயில் பயணத்தின்போது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆதார் மட்டும் இன்றி ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம். இனிவரும் நாட்களில் ரெயில் பயணத்தின் போது ஆதார் அட்டை கட்டாயம் ஆகும் என்று தெரிகிறது.
- இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
- திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி :
நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆதார் அட்டைதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து, 'அப்டேட்' செய்ய வேண்டும்.
அதன்மூலம், ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.
இந்த பணியை ஆதார் அட்டைதாரர்கள் செய்வதற்காக, 'மைஆதார்' இணையதளத்திலும், 'மைஆதார்' செயலியிலும் 'அப்டேட் டாக்குமெண்ட்' என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இதுதவிர, பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆதார் எண் வழங்கிய நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த ஆவணங்களை ஆதார் அட்டைதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதே கோரிக்கையை விடுத்திருந்தது. இப்போது, மத்திய அரசு, ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்ட போதிலும், இவற்றில் எத்தனை எண்கள் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுபோல், 'பயோமெட்ரிக்' விவரங்களை புதுப்பிப்பது பற்றி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
- இது போன்ற தவறான தகவல்களை, பொதுமக்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
- கடன் தொடர்பான வதந்தியை நம்பி, வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.
புதுடெல்லி:
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலி யான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.
- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்துவிட முடிகிறது.
- ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியும் வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. இப்படி ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியும் வருகிறது.
இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (28-ந்தேதி) முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.
இதற்கிடையே மின் இணைப்புடன் ஆதாரை 5½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






