என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெயில் பயணிகளின் ஆதாரை சரி பார்க்க ஊழியர்களுக்கு உத்தரவு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது.
- டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
பெரும்பாலான பயணிகள் நீண்டதூர பயணத்துக்கு ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறைந்த கட்டணம், பயணம் செய்வதில் கூடுதல் வசதி உள்ளிட்டவற்றால் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே சமீபகாலமாக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நாட்க ளிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடுகிறது.
மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பே சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் ரெயில்வே தங்குமிடங்கள், பயணம் உள்ளிட்டவற்றிற்கு போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ரெயில்வே தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட் சரிபார்ப்பு அலுவலர்கள் பயணிகளின் ஆதார் அட்டையை கவனமாக சரிபார்க்க ரெயில்வே அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது.
பயணிகளின் ஆதார் அட்டையை "எம்ஆதார்" எனப்படும் ரியல்டைம் அப்ளிகேஷனை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் வேண்டும், அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ரெயில் பயணத்தின்போது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆதார் மட்டும் இன்றி ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம். இனிவரும் நாட்களில் ரெயில் பயணத்தின் போது ஆதார் அட்டை கட்டாயம் ஆகும் என்று தெரிகிறது.






