search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
    • தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


    இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர். 

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
    • நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    எடப்பாடி:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.

    தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.

    இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.

    மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

    • ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

    இந்தநிலையில் இன்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் வளர்க்கும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடைமுறைகள் இருந்ததால் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்தே இருந்தது. இந்த நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

    ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதனால் அம்மனுக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். அதிலும் கருப்பாக உள்ள வெள்ளாடுகளையே அதிகமாக வாங்கினர்.

    மேலும், கொம்பு கிடாக்களையும் மக்கள் வாங்கினர். இன்றைய சந்தையில் இறைச்சிக்காக 10 கிலோ எடையில் இருந்து 35 கிலோ எடை வரை ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வெள்ளாடுகள் 10 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 30 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் 9 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

    ஆனால் இன்றைய சந்தையில் ஆடுகள் விலை 500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையாகியது. ஆடுகள் விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேர்தலுக்கு பிறகு, பண்டிகை காலம் என்பதால் இன்று நடந்த சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாகவும், அடுத்து வரும் வைகாசி மாதத்திலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

    தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.

    இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • 7 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்காடு:

    ஏற்காடு அண்ணா பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர்கள் பூத்துக்குலுங்கும். 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு அவை மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும், பூங்கா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 7 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை துறை ஊழியர்கள் 1 லட்சம் மலர் நாற்றுகளை பூங்கா முழுவதிலும் நடவு செய்துள்ளனர்.

    சீசன் நெருங்கிய நிலையில், தற்போது டேலியா செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது, பல வண்ணங்களில் டேலியா மலர்கள் உட்பட பல வகையான மலர்கள் பூத்துக்குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    ஏற்காடு பகுதியில் கோடை விழா மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

    மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஏற்காடு மலைபாதை 8 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி சுமார் 4 ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்தது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர் ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீ கொளுத்தி விட்டு எரிந்தது.

    இதையடுத்து சேலத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாதையில் இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்தனர்.

    காட்டுத்தீ காரணமாக மலை பாதை முழுவதும் புகையும் சாம்பலுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.
    • ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
    • இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி. மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதியில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கோவில்களை கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

    அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிராம மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இதில் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி, கிறிஸ்துவ ஆலயத்தின் முகப்பு பகுதி வெளியே தெரிவது வழக்கம்.

    இந்நிலையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரத்தில் மேல் பகுதி நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    இதனை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.66 அடியாகவும், நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். தற்போது மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் கீழ் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 57 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
    • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

    அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

    இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    ×