என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbumani"

    • ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
    • பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.

    பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர். சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 16,500க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.

    ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் திமுக, பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

    ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில் திமுக ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது. அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி.

    • வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
    • கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.

    இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே தலைவர் என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.

    17.12.2025 முதல் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.

    இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
    • ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது.

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-

    தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்ப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002&03ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.

    இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.

    பழைய ஓய்வூதியத்துடன் ஓப்பிடும் போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு; பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு? என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

    வழக்கமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியமும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களுக்கு கால அளவிற்கு ஏற்ற வகையிலும் ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி 30 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்பதும், அதன் அளவை குறிப்பிடாததும் பெரும் அநீதி.

    அதேபோல், 2003&ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு எவ்வளவு? என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்காமல் கருணை ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிப்பது அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி சிறுமைப்படுத்தும் செயலும் ஆகும்.

    இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு அரசு ரூ.13,000 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தத் தொகையை, இன்னும் 45 நாள்களில் முடங்கவிருக்கும் திமுக அரசு, எப்போது, எப்படி செலுத்தும்? என்பது தொடர்பாக எந்த விளக்கமும் திமுக அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும் போது தான் தெளிவாகத் தெரியும். அத்தகைய அரசாணை வெளியாகும் போது அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.

    அதுமட்டுமின்றி, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான 30 ஆண்டுகள் பணி செய்ய வாய்ப்பில்லாதவர்களும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்; அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள், அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஓட்டைகள் நிறைந்த இத்திட்டத்தை அரசு அறிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான்.

    இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைக்கப்படும் போது பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?
    • முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி என தமிழகம் முழுவதும் எடுத்துக் கூறியது யார் என்றார் ஜி.கே.மணி.

    சேலம்:

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

    இந்நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    46 ஆண்டு காலம் நான் ராமதாசுடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலம் கட்சி தலைவராக இருந்திருக்கிறேன்.

    என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.

    கட்சியில் ஒருவரைச் சேர்க்கவும், நீக்குவதற்கான அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.

    பா.ம.க.வில் சேர வேண்டும் என்று அன்புமணி நினைத்தால், ராமதாசை நேரில் சென்று பார்க்க வேண்டும். அவர் சேர்த்துக் கொண்டால் கட்சியில் இருங்கள்.

    அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான்.

    அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்? கொஞ்சம்கூட மனசாட்சி வேண்டாமா?.

    பா.ம.க. என்ற ஆலமரம் ராமதாஸ்தான். தற்போது ராமதாஸ் கை ஓங்கிக் கொண்டிருக்கிறது.

    எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல செய்தியை அறிவிப்பார் என தெரிவித்தார்.

    • 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.

    'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

    2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.

    நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.

    அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.

    நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும். 

    நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

    ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.

    செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.

    இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ,  அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு
    • பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.

    வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. 

    • வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர்.
    • தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.

    இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.

    இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.

    மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.

    மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
    • அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலில் சில தவறுகள் செய்தது உண்டு, அதில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. அருவருக்கத்தக்க வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது. என்னோடு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 3 எம்எல்ஏக்கள் தற்போது அன்புமணி கும்பலோடு போய்விட்டனர்.

    அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்தது. இப்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு நான்தான் காரணம். பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளேன், என்னை எதிர்ப்பவர்களுக்கும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம்.

    என்னுடன் இருந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளி தனம் செய்கிறார்கள்.

    அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள்.

    ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள்.

    அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ்.
    • சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.

    திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:-

    ராமதாஸ் அவர்கள் ஐசியுவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆஞ்சியோகிராம் செய்யும்போது கூட அவருக்கு மயக்க மருத்து செலுத்தவில்லை. ஐயாவிடம், உங்களது இதயம் எப்படி துடிக்கிறது என்று பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறினர்.

    அவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அதனால், அவர் ஐசியுவில் இல்லை. அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் நலம் விசாரித்தனர்.

    பெரும்பாலான தலைவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தனர். வர முடியாதவர்கள் போனில் பேசி நலம் விசாரித்தனர்.

    சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.

    அதனால், யாரையும் மருத்துவமனைக்கு வந்து ராமதாஸ் அவர்களை பார்க்கும்படி வற்புறுத்தவில்லை. இது அன்புமணி கூறும் அபாண்டமா பொய். இவ்வாறு கூறுவது தேவையற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப்களில் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    டிஜிபி அலுவலக வளாகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு அவமானகரமான எடுத்துக்காட்டு!

    சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

    காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.

    தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர்.
    • மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.

    உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.

    பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது.

    தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது என்றும் அறிவுறுத்தினர். அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002-ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.

    தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வந்தால். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.

    தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.

    அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ×