என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    442 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது
    X

    442 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது

    • கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
    • அணையில் இருந்து 8,000 கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை முக்கிய பங்காற்றி வருகிறது. மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

    அதனைத் தொடர்ந்து 442 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வந்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 208 கன அடியாக உள்ளது.

    அணையில் இருந்து 8,000 கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரில் அளவை காட்டிலும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் 100.40 அடியிலிருந்து இன்று 99.84 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 64.63 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 442 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடிக்கு கீழ் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×