search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார்.

    இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கன்னியம்மாள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளைபோய் இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தன. மர்ம கும்பல் கன்னியம்மாளை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். மோப்பநாய் டைகர் கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது. அங்கிருந்து வாகனத்தில் கொலை கும்பல் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே அவரது இட்லி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.
    • மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் தொடங்கியது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாம்பரம்- வேளச்சேரி சாலையில் முடிவுற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.

    • மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு இன்று காலை 7:50க்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முற்றிலும் கருங்கல்லினால் கட்டப்பட்ட புதிய ராஜகோபுரம் நிர்மானம் செய்யப்பட்டு அதன் விமானத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    கடந்த வியாழக்கிழமை முதல் கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேல்விகள் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகமாக ஆட்சி செய்தபோது மன்னரின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்சோதி என்பவரால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.


    13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நந்திகேஸ்வரர் பிரதோஷ கமிட்டியினர் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவு காரரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 82.

    இந்நிலையில், மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள "ஆர்ட் ஸ்டுடியோ" என்ற சிற்பக்கூடத்தில், மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குருவான பங்காரு அடிகளாரின் கற்சிலை 450 கிலோ எடை கொண்ட கருங்கல்லில், நான்கு அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் அவர் அமர்ந்து இருப்பது போன்று தத்ரூபமாக செதுக்கப்பட்டு வந்தது.

    இதை சிற்பி முருகன் என்பவர் 4பேருடன் இணைந்து 3 மாதங்களாக செதுக்கி வந்தார். சிலைக்கு இறுதி வடிவமும் கொடுத்து மேல்மருவத்தூர் அனுப்ப தயாராக வைத்திருந்தனர். 

    இந்த நிலையில் சிலையை நேரில் பார்க்க பங்காரு அடிகளாரின் மனைவியும் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியுமான லட்சுமி அம்மாள் நேரில் வந்தார்.

    பட்டறை பணியாளர்கள் சிலையை தண்ணீர் விட்டு கழுவி கான்பித்தபோது, சிலையை பார்த்து லட்சுமி அம்மாள் கண்கலங்கினார்.

    பின்னர் சிலைக்கு பூஜைகள் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சிலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வைத்து வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    • முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் கருத்து.

    கல்பாக்கம் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனகபுரீஸ்வரர் கோயில் அருகில் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் முக்கிய கோரிக்கையாக, கள் இறக்க அனுமதி, அதை பதப்படுத்தி வைக்க குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ம.பொ.சி பெயரில் அரசு விருது கொடுக்க வேண்டும், கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பனை, தெண்ணை மரங்களில் இருந்து தொழிலாளி விழுந்து இறந்தால் அரசு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பதநீர் மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், " காமராஜரும்- ம.பொ.சி யும் நாணயத்தின் இரு பக்கங்கள். விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு உரிமம் வழங்கியது போல் தமிழக அரசும் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்" என்றார்.

    தமிழ்நாடு நிலதரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் புறப்பட்ட சென்றனர்.

    சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொது மக்கள் கூட்டம் காரணமாக பேருந்துகள், ரெயில்கள் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது

    இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    • 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.
    • வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.48 கோடி செலவில் கட்டிடம்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, அணுமின் நிலையம் சார்பில் அதன் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1கோடியே 48 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.


    இதன் திறப்பு விழா வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, ஆகியோர் பங்கேற்று, வகுப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.

    நிகழ்ச்சியில் அனுமின் நிலைய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல்.
    • மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


    இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
    • ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதி ஒத்தவாடை தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் கமலி (வயது 14). இவர் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகி றார்.

    மீனவர் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மாமா கடலில் சர்பிங் செய்வதை பார்த்து வளர்ந்ததால், அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு 2வயது முதலே சர்பிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்க துவங்கினார்.

    தொடர்ந்து வயது வாரியான பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் மாலத்தீவில் நடந்த ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 4 சுற்றுவரை முன்னேறி, இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

    தொடர்ந்து ஜப்பானில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை16நாட்கள் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் முதன், முதலாக சர்பிங் போட்டி இடம் பெற்றுள்ள நிலையில், ஆசிய அளவிலான அந்த போட்டியில் பங்கேற்க செல்ல இருக்கும் மாமல்லபுரம் பள்ளி மாணவி கமலிக்கு அவர் படிக்கும் பள்ளியின் சார்பில் பள்ளி தாளாளர் பிரான்சிஸ், தலைமை ஆசிரியை பிருந்தா ஆகியோர் சிறப்பு செய்து, பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்தனர்.

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சந்தனமாலை, கிரீடம் அணிவித்து கவுரவித்தனர்.

    • நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
    • திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்பு கலையின் "வேல்டு ரெக்கார்ட்" சான்றிதழ் தேர்விற்காக ஆசான் மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் சார்பில், குலோபல் வேல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமார் முன்னிலையில் 30 நிமிடத்தில், 3 வயது முதல் 20 வயது வரையான 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றை சுற்று, இரட்டை சுற்று ஆகிய தற்காப்பு கலைகளை தொடர்ந்து செய்து காண்பித்தனர்.


    நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
    • ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது., இதில் ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது மற்றும் பல்வேறு வனவிலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என, வெவ்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


    இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்க விட்டுள்ளனர்., போட்டியை துவக்கி வைத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வெளிநாட்டவர் பறக்க விட்ட ஜல்லிக்கட்டு காளை காத்தாடியை அருகில் சென்று பார்த்து ரசித்தனர்., சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


     வரும் 18ம் தேதி வரை தினசரி பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 6மணி வரை காத்தாடிகள் பறக்க விடப்படுகின்றன., நுழைவு கட்டணம் ரூ.200, 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி. உணவு, வர்த்தக அரங்குகள், கேளிக்கை விளையாட்டுகள், பாட்டுக்கச்சேரி, பேஷன்ஷோ மேடை போன்ற அரங்குகள் வளாகத்தின் உள்ளே இடம் பெற்றுள்ளது.

    ×