என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலா"
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.
மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.
திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.
ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
- தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரியில் சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலா துறை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.
ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து விடுகின்றனர்.
ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பூங்காவை மட்டுமே கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் குன்னூர், கோத்தகிரி, மைனாலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தலங்களை கண்டறிவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறிந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
தமிழ்நாட்டுக்கு 2022-2023-ம் ஆண்டில் 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 32 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க, மருத்துவ சுற்றுலா உள்பட பிற சுற்றுலாக்களை பிரபலப்படுத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.160 கோடி கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எல் அண்ட் டி நிறுவனம் மூலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பால்மிரோவில் இருந்து கிளம்பிய திருமண கொண்டாட்ட கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை சென்று திரும்பியது.
- பணத்தால் அனைத்தையும் வாங்கி மற்றவர்களை வரவிடாமல் செய்வது நியாயமானது அல்ல எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் அபிப்ராயப்படுகின்றனர்
உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வருகிறார். என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சி.இ.ஓ விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டுடன் ஆனந்த் அம்பானிக்குக் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு நடந்த ப்ரீ வெட்டிங் வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் இத்தாலியில் சொகுசு கப்பலில் கடந்த மே 29-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2 வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. இதில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி உட்பட பல சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.
பால்மிரோவில் இருந்து கிளம்பிய திருமண கொண்டாட்ட கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை சென்று திரும்பியது. அதன்பிறகு இத்தாலி நகரத்துக்குள் தொடரும் இந்த நிகழ்ச்சிக்காகப் பல இடங்கள், சுற்றுலாப் பயணிகள் வரவும், உள்ளூர் மக்கள் நுழையவும் தடை செய்யப்பட்டது.
கேரளாவைப் போல இத்தாலி நகரத்துக்கிடையில் நீர்நிலைப் போக்குவரத்து அதிகம். திருமண நிகழ்ச்சிக்காக சில நீர் வழிப் பாதைகளை அடைத்ததால் உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ரெஸ்டாரன்டுகள் இந்த நிகழ்ச்சிக்காக மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது.
பணத்தால் அனைத்தையும் வாங்கி மற்றவர்களை வரவிடாமல் செய்வது நியாயமானது அல்ல எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் அபிப்ராயப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இருந்து வரும் அதிக சத்தத்தாலும், நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களின் மரியாதைக் குறைவான நடத்தையாலும் உள்ளூர் மக்களும், விடுதி ஊழியர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிடம் அவர்கள் புகார்களும் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆனந்த் அம்பானி மட்டும் ராதிகாவின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.
தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
முன்னதாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந்த நிலையில்தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, ரஷியா இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என்றார்.
புதுடெல்லி:
இந்தியா, ரஷியா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய மந்திரி நிகிதா கொன்ராட்யேவ் கூறுகையில், இந்தியா-ரஷியா இடையிலான பயணத்தை எளிதாக்க இரு நாடுகளிடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தாண்டுக்குள் இறுதி செய்யப்படும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என தெரிவித்தார்.
- போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
- இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோடை காலம் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதையொட்டி, சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இதர சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.
இதை கருத்தில் கொண்டு கோடை மற்றும் விடுமுறை காலக்கட்டமான மே மாதத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெளியூர்களில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் செல்லும் உள்ளூர் மக்களும் ஒருமுறை இ பாஸ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் "epass.tnega.org" என்ற இணையதளத்தில் இபாஸ் பெறலாம். இ பாஸ் நடைமுறை மே 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
- இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கவுகாத்தி:
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.
இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
- கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பஸ், சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஹோட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.
கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அறிவித்தது.
- விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.
டெஹ்ரான்:
உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.
வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.
சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.
அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.
ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓய்வுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவார்கள்
- உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பித்தான் உள்ளது
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).
இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.
கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.
சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.
ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.
இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.
புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
- இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
மதுரை:
மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.
மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.
விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.
எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.
அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.
நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.
- மாணவர்கள் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
- விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்