என் மலர்
இந்தியா

பாகிஸ்தான் உளவாளி யூடியூபருக்கு சிவப்பு கம்பளம்.. சர்ச்சையில் சிக்கிய கேரள அரசு - அமைச்சர் விளக்கம்!
- அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?
- கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்கு ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த காலங்களில், கேரள சுற்றுலாத் துறையின் விளம்பர நிகழ்வுகளுக்கு ஜோதி மல்ஹோத்ராவை அழைத்தது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,
"பாகிஸ்தானுடன் தொடர்புள்ள ஒருவருக்கு கேரளாவில் ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது? அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?" என்று பாஜக தலைவர்கள் ஆளும் பினராயி விஜயன் அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஜோதி மல்ஹோத்ராவைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். சுற்றுலா பிரச்சாரத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து பல பிரபலங்களை அழைத்ததாகவும், ஜோதி மல்ஹோத்ரா அவர்களில் ஒருவர் என்றும் அவர் கூறினார்.
உளவு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த விளம்பர நிகழ்வு நடந்ததாக அவர் கூறினார்.






