search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Government"

    • சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
    • வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு தலைமைச் செயலாளராக இருப்பவர் டாக்டர் வி.வேணு. கடந்த ஆண்டு வேணு கேரள அரசு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் வருகிற 31-ம் தேதியுடன் வேணு ஓய்வு பெறுகிறார். இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

    மந்திரி சபை கூட்டத்தில் புதிய தலைமை செயலாளராக வேணுவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி சாரதா முரளீதரனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாரதா முரளீதரன் கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இவர் திட்டக்குழு கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்.

    கேரளாவில் கணவரை தொடர்ந்து மனைவி தலைமை செயலாளராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 1-ம் தேதி கேரளாவின் புதிய தலைமை செயலாளராக சாரதா முரளீதரன் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்.

    • வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

    33-வது ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

    இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக பி.ஆர் ஸ்ரீஜேஷ் அறிவித்தார்.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    • கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
    • 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. அதாவது மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்ய இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

    இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மேற்கொண்டு கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    • நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
    • வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.

    வயநாடு:

    நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.

    நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தனர்.

    வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.

    • பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் அரசு போக்குவரத்து துறை லாபத்தை ஈட்டும் வகையில் கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. மாநிலத்தில் 44 கவுண்டர்கள் மற்றும் தமிழகத்தின் கோவை, நாகர்கோவில் பகுதிகளில் செயல்படும் கவுண்டர்கள் மூலம் இந்த சேவை நடைபெற்று வந்தது. பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    25 கிராம் எடை உள்ள கூரியர்களுக்கு 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது. இந்த கூரியர் சேவை மூலம் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
    • தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.

    தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.
    • கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்:

    தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு பொய்பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்கு அனுமதி பெறுவதற்காக அம்மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.

    கேரள அரசின் இந்த செயலை தமிழக அரசு மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 1 அரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று மேலூர் பஸ் நிலையம் அருகில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு புதிய அணைக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலூர், வெள்ளலூர், திருவாதவூர், சூரக்குண்டு, கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு, சிலந்தி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர் வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா பகுதியில் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தி ஆற்றை தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படுவதுடன், அணையை ஆதாரமாக கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அமராவதி அருகே தமிழக-கேரள எல்லை அருகே சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு இன்று விவசாயிகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை தாங்கினார். விவசாயிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் கூறியதாவது:-

    அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான். எனது தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இது போன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவன மாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது. கேரளத்தின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.

    இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,

    1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
    • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

    இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

    இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
    • போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

    பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.

    அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.

    மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.

    அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.

    தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

    இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

    எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×