search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது கேரள அரசு
    X

    ஜனாதிபதி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது கேரள அரசு

    • ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.

    இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.

    ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

    அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.

    அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.

    இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.

    முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.

    இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×