என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி"

    • டெல்லியில் இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
    • 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அன்று, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை முடித்தனர். அதே நாளில், இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் நமதுஅரசியலமைப்பின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார்.

    நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நமது தனிப்பட்ட, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

    காலனித்துவ மனநிலையை விலக்கி தேசிய வாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு வழிகாட்டும் ஆவணம் ஆகும்.

    முத்தலாக் தொடர்பான சட்டம் மூலம், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நீதியை நோக்கி பாராளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது.

    370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த ஒரு தடை நீக்கப்பட்டது.

    அரசியலமைப்பில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது.

    பெண்கள், இளைஞர்கள், எஸ்.சி, எஸ்.டி, விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.

    25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெ டுத்தது நாட்டின் மிகப்பெ ரிய சாதனைகளில் ஒன்றா கும். இந்தியா உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை வழங்கி வருகிறது. இந்திய பாராளுமன்றம் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
    • தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.

    இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், இதன் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.

    அதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

    கடந்த செப்டம்பர் 11-ந்தேதி விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,

    * ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

    * ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.

    * ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது.

    * தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.

    * ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.

    * ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும்.

    * ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும் என்று தீர்ப்பளித்தது.

    இதன் மூலம் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    • மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
    • மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.

    செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

    அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,

    * மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    * சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்கக்கூடாது.

    * மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

    * மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது.

    * அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

    * மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்.

    * ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம்.

    * மத்திய அரசு கூறுவதுபோல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு இல்லை.

    * மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிரடி தீர்ப்பளித்தது.

    • எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
    • மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்.

    மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சில மசோதாக்கள்  நிறுத்தப்பட்டுதான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மெல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.

    நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரையின்றி தாமதமாக வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தவில்லை.

    கடந்த 55 ஆண்டுகளில் 17,000 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 20 மசோதாக்களை மட்டும் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மாநிலங்கள் தவறான புகார்களை எழுப்புகின்றன என்று வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், "எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய நீதிபதி, "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஆளுநர்களால் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

    இதன்பின் பேசிய துஷார் மேத்தா, " ஆளுநரின் பங்கு அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான். காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் ஒரு வரையறையை உருவாக்க முடியாது.

    மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஒப்புதலை நிறுத்தி வைக்க வேண்டும்அவசியம் உள்ளது" என்று வாதிட்டார்.  

    • இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
    • தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது

    இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக வாங்கும் புதிய BMW காருக்கு வரிகளில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ரூ.3.66 கோடி மதிப்புள்ள இந்த குண்டு துளைக்காத வாகனத்தின் மீது IGST மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை தள்ளுபடி செய்ய GST கவுன்சில் முடிவெடுத்தது.

    வழக்கமாக, இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.

    இருப்பினும், இந்த வாகனம் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று கருதிய GST கவுன்சில், ஜனாதிபதியின் வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான  சிறப்பு காரணத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது.

    இதன் மூலம், ஜனாதிபதியின் செயலகம் இந்த வாகனத்தை எந்த வரி சுமையும் இல்லாமல் வாங்கும்.

    தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது. இப்போது அந்த இடத்தை BMW செடான் நிரப்ப உள்ளது. 

    • தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
    • இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

    மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

    பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார்.
    • இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

    மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.

    இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார். இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

    அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நடைபெற்றது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆலோசனை கோரியுள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க பயன்படுத்தப்படக்கூடாது என தமிழகம் மற்றும் கேரளா அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

    இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    அப்போது பேசிய பி.ஆர்.கவாய், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 அன்று அளித்த உத்தரவை மாற்றியமைக்காது.

    ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்பதை ஒரு மேல்முறையீடாக கருத மாட்டோம். நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் பணியில் மட்டுமே ஈடுபடும்" என்று தெரிவித்தார். 

    • மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
    • ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.

    ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.

    சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.

    நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.

    தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

    • கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவை கருதப்படுகிறது.
    • புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்றால் கவர்னரைத்தான் குறிக்கும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவை கருதப்படுகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் வளர்ச்சிப்பணிகளை எளிதில் செய்ய முடியும் என்பதால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்டகாலமாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    மாநில அந்தஸ்துக்கான போராட்டம் புதுச்சேரியில் நீண்டகாலமாக நிலவுகிறது. சட்டசபையில் இதுவரை 16 தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையிலான பொதுநல அமைப்புகள் மாநில அந்தஸ்துக்காக புதுச்சேரியில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனர்.

    புதுச்சேரி மக்கள் கையெழுத்திட்ட மனுவுடன் டெல்லியில் போராட்டம் நடத்த நேரு எம்.எல்.ஏ. தலைமையில் பொது நல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பேர் டெல்லிக்கு சென்றனர்.

    டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வாழ்த்தி பேசினார்.

    போராட்டத்தில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல், குஜராத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் ஏந்தி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி அலுவலகத்தில் மக்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.

    • ஜனாதிபதி இன்று அவரது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    நமது நாட்டில் பெண்கள் அதிகாரமளிப்பின் ஒளிரும் சின்னமாக நீங்கள் திகழ்கிறீர்கள்.

    நீங்கள் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார்.
    • மக்களுக்கு சேவை செய்வதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற ஆசீர்வதிக்கப்படுவார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ஜனாதிபதிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும் தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.

    பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாகும்.

    ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்வதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற ஆசீர்வதிக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×