என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலமைப்பில் சமூக நீதிக்கு முன்னுரிமை- ஜனாதிபதி திரவுபதி முர்மு
- டெல்லியில் இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
- 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இதில் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அன்று, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை முடித்தனர். அதே நாளில், இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் நமதுஅரசியலமைப்பின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நமது தனிப்பட்ட, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.
காலனித்துவ மனநிலையை விலக்கி தேசிய வாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு வழிகாட்டும் ஆவணம் ஆகும்.
முத்தலாக் தொடர்பான சட்டம் மூலம், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நீதியை நோக்கி பாராளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது.
370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த ஒரு தடை நீக்கப்பட்டது.
அரசியலமைப்பில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது.
பெண்கள், இளைஞர்கள், எஸ்.சி, எஸ்.டி, விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெ டுத்தது நாட்டின் மிகப்பெ ரிய சாதனைகளில் ஒன்றா கும். இந்தியா உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை வழங்கி வருகிறது. இந்திய பாராளுமன்றம் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.






