புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம்- ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு

கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவை கருதப்படுகிறது.புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம்- ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு
Published on

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்றால் கவர்னரைத்தான் குறிக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவை கருதப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருந்தால்தான் வளர்ச்சிப்பணிகளை எளிதில் செய்ய முடியும் என்பதால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்டகாலமாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மாநில அந்தஸ்துக்கான போராட்டம் புதுச்சேரியில் நீண்டகாலமாக நிலவுகிறது. சட்டசபையில் இதுவரை 16 தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையிலான பொதுநல அமைப்புகள் மாநில அந்தஸ்துக்காக புதுச்சேரியில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனர்.

புதுச்சேரி மக்கள் கையெழுத்திட்ட மனுவுடன் டெல்லியில் போராட்டம் நடத்த நேரு எம்.எல்.ஏ. தலைமையில் பொது நல அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பேர் டெல்லிக்கு சென்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வாழ்த்தி பேசினார்.

போராட்டத்தில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல், குஜராத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் ஏந்தி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி அலுவலகத்தில் மக்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com