என் மலர்
இந்தியா

மாநிலங்களின் சில மசோதாக்களை நிறுத்தி வைத்துதான் ஆக வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
- எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி.
- மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சில மசோதாக்கள் நிறுத்தப்பட்டுதான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மெல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரையின்றி தாமதமாக வருவதை மத்திய அரசு நியாயப்படுத்தவில்லை.
கடந்த 55 ஆண்டுகளில் 17,000 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 20 மசோதாக்களை மட்டும் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மாநிலங்கள் தவறான புகார்களை எழுப்புகின்றன என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், "எத்தனை மசோதாக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது கேள்வி அல்ல, மாறாக மசோதாவை காலவரையின்றி முடக்க முடியுமா என்பதுதான் கேள்வி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஆளுநர்களால் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எப்படி கூற முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பின் பேசிய துஷார் மேத்தா, " ஆளுநரின் பங்கு அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான். காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் ஒரு வரையறையை உருவாக்க முடியாது.
மசோதாக்கள் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளில் இருக்கும்போது ஒப்புதலை நிறுத்தி வைக்க வேண்டும்அவசியம் உள்ளது" என்று வாதிட்டார்.






