என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்ற கவர்னர், துணை முதலமைச்சர்
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
- இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






