என் மலர்
இந்தியா

ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், இதன் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
கடந்த செப்டம்பர் 11-ந்தேதி விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
* ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
* ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
* ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது.
* தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
* ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
* ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும்.
* ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதன் மூலம் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.






