என் மலர்
இந்தியா

மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி
- மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
- மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
புதுடெல்லி:
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.
செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
* மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
* சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்கக்கூடாது.
* மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
* மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது.
* அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
* மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்.
* ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம்.
* மத்திய அரசு கூறுவதுபோல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு இல்லை.
* மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிரடி தீர்ப்பளித்தது.






