search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silanthi River"

    • தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு, சிலந்தி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர் வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா பகுதியில் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தி ஆற்றை தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படுவதுடன், அணையை ஆதாரமாக கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அமராவதி அருகே தமிழக-கேரள எல்லை அருகே சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு இன்று விவசாயிகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை தாங்கினார். விவசாயிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் கூறியதாவது:-

    அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான். எனது தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இது போன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவன மாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது. கேரளத்தின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.

    இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,

    1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.
    • முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே....

    இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.... இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன?

    முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

    இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா?

    தமிழர்கள் மீதான பற்றா?

    தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா?

    உங்கள் மவுனம் கலையுமா?

    வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
    • தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அணையின் கொள்ளளவு 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.

    கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியதுடன் தற்போது மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வடமாவட்டங்களையும் வறண்ட பூமிமாக்கியது.

    பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 215 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.

    திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டின் உரிமை மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைநின்று தமிழ்நாடு பாஜக துரோகம் செய்கிறது. அதற்கு, சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி மற்றும் சிலந்தி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகமாகும்.

    ஆகவே, சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • தற்போது கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கட்டி தமிழ்நாட்டின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் வாயிலாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நூற்றுக்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரள அரசால் கட்டப்படும் இந்த புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக கட்டப்படுவதாக கூறப்படும் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    அமராவதி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், கூட்டணி தர்மத்திற்காக கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.

    எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

    • ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.


    ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

    ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


    • கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது.
    • திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறை யல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018-ம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு எனது தலைமையில் பா.ம.க. மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

    கர்நாடகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

    கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×