search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Government of Kerala"

  • முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு.
  • கோள அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாலைவனமாகும்

  முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

  "தென் தமிழக மக்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திற்கு கேரள அரசு கருத்துரு அனுப்பியிருப்பதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை முற்றிலும் தடுக்கும் முயற்சியாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையினை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக கேரள மாநில எல்லைக்குள் புதிய அணை கட்டிக் கொள்வதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டினை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வு வரம்புகளை நிர்ணயம் செய்யுமாறு கேரள அரசு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், இதன் அடிப்படையில் கேரள அரசின் கருத்துரு சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவிற்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையில், இந்தக் கருத்துரு வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினால் 28-05-2024 அன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

  முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும்

  என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது.

  உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், பத்து ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ மறுத்து வரும் கேரள அரசு, தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் பழைய அணையை இடிக்கவும், புதிய அணையை கட்டவும் மத்திய அரசை அணுகியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

  கோள அரசின் இதுபோன்ற தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கை என்பது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயலாகும். கேரள அரசின் தமிழகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை ஜனவரி மாதமே தி.மு.க. அரசுக்கு தெரிய வந்தும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற செயலை செய்துவிட்டு, தற்போது மத்திய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதுவது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும். இந்தக் கடிதத்தை ஜனவரி மாதமே மத்திய அரசுக்கு எழுதியிருந்தால், சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவின் பரிசீலனைக்கே இந்தப் பிரச்சனை சென்றிருக்காது. தி.மு.க. அரசின் அரசியல் ஆதாயம் காரணமாகத்தான் இந்தப் பிரச்சனை சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீடுக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

  'வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்' என்ற பழமொழிக்கேற்ப, ஆபத்து வரும் முன்பே அதைத் தடுத்த நிறுத்த தேவையான நடவடிக்கைகளை இனிமேலாவது உடனடியாக எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  • பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
  • தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும்.

  சென்னை:

  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

  தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அணையின் கொள்ளளவு 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.

  கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியதுடன் தற்போது மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வடமாவட்டங்களையும் வறண்ட பூமிமாக்கியது.

  பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 215 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.

  திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டின் உரிமை மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.

  இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

  கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைநின்று தமிழ்நாடு பாஜக துரோகம் செய்கிறது. அதற்கு, சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி மற்றும் சிலந்தி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகமாகும்.

  ஆகவே, சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது.
  • திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

  தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறை யல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018-ம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு எனது தலைமையில் பா.ம.க. மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

  கர்நாடகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

  கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது
  • நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

  கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்கக் கூடாது என வழங்கப்பட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் நடனமாடுவது, தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள். இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர்.

  கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பலர் சீருடையில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நடனமாடி வீடியோ பதிவேற்று வந்தனர். இந்நிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்க கூடாது என கேரள அரசு மார்ச் 13-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

  இந்த சுற்றறிக்கைக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த சுற்றறிக்கையை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்நிலையில், அந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நிலையில், அந்த உத்தரவை கேரள அரசு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  • பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
  • கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது குருவாயூர் கிருஷ்ணன் கோவில்.

  இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவிலில் எப்போதும் இருக்கும்.

  இந்த நிலையில் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோவில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்த சூழலில் கோவிலுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

  இதன் அடிப்படையில் தான் கோவிலுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  ×