என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கியம்"

    • புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புகிறது.
    • தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    தமிழ் உட்பட இந்திய மொழிகளில் படைக்கப்ட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாகித்ய அகாடமி என்பது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    விருது பெற்றவர்களின் பட்டியலை நிர்வாகக் குழு  அங்கீகரித்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அரசு பிரதிநிதிகள் சாகித்ய அகாடமி அதிகாரிகளுக்கு விருது வென்றவர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய சாகித்ய அகாடமி உறுப்பினர் ஒருவர் "நிர்வாகக் குழு பரிசு பெற்றவர்களின் பட்டியலை அங்கீகரித்த பிறகு, அரசாங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்தனர். பரிசு பெற்றவர்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்" என்று தெரிவித்தார்

    புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருது செயல்பாடுகளை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   

    • இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
    • பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும்.

                                               நான் பேரழிவை பற்றி எழுதுகிறேன் - லாஸ்லோ

    71 வயதான ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கை (László Krasznahorkai) 2025 நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளார்.

    1954இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில், ரோமானியா எல்லைக்கு அருகில் உள்ள குயூலா (Gyula) என்ற சிறிய நகரில் லாஸ்லோ பிறந்தார்.

    அபத்தவாதம், அதீதம், இருத்தலியல் ஆகிய பாங்குகளில் அமைந்த இவரின் படைப்புகள், பிரான்ஸ் காஃப்கா மற்றும் தாமஸ் பெர்ன்ஹார்ட் போன்றோரின் எழுத்து மரபில் இருந்து உருவானது எனலாம்.

    சரிவின் விளிம்பில் இருக்கும் சமூகம் இவரின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் ஊடாகுகிறது. அதுவே இவருக்கு பேரழிவுவின் (Master of Apocalypse) ஆசான் என்ற பெயர் அமைய காரணமாகிறது.

    தற்கால எழுத்தாளர்களில் மத்திய ஐரோப்பிய இலக்கிய மரபில் தனக்கென தனி இடத்தை லாஸ்லோ உருவாகியுள்ளார்.

    லாஸ்லோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முற்றுப்புள்ளிகள் இல்லாத மிக நீளமான, தொடர்ச்சியான வாக்கியங்களைப் பயன்படுத்துவதுதான்.

    இது ஒரு கதையை ஒரே மூச்சில் சொல்வது போன்ற இடைவிடாத, தலைசுற்ற வைக்கும் உணர்வை வாசகருக்குக் கொடுக்கும்.

    லாஸ்லோவின் முதல் நாவல் 'சாதன்டாங்கோ' (Satantango) 1985இல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

    கம்யூனிசம் வீழ்ச்சியடையும் தருவாயில், ஹங்கேரிய கிராமப்புறத்தில் கைவிடப்பட்ட ஒரு கூட்டுப் பண்ணையில் வாழும் ஏழைகளின் அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தை சித்தரிக்கும் இந்த பிரதி நம்பிக்கைத் துரோகம் மற்றும் சமூகச் சரிவைப் பற்றி பேசுகிறது.

    இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.

    லாஸ்லோவின் 2வது நாவலான 'தி மெலன்கோலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்' (The Melancholy of Resistance) 1989 இல் வெளிவந்தது. ஹங்கேரியில் கார்பாத்தியன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகருக்கு மர்மம் மற்றும் வினோதம் நிறைந்த சர்க்கஸ் குழு ஒன்று வருகிறது.

    உயிரிழந்த ராட்சத திமிங்கலத்தின் சடலத்தை அவ்வூரில் சர்க்கஸ் குழு காட்சிக்கு வைக்கிறது. இதனை தொடர்ந்து அவ்வூரில் நிகழும் வன்முறை, அதிகார மாற்றத்திற்கான களம் அமைக்கபடுவதை விவரிக்கும் நாவல் ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தை உவமைப்படுத்துகிறது.

    இந்த நாவலும் இயக்குனர் பேலா டார் இயக்கத்தில் 'வெர்க்மீஸ்டர் ஹார்மோனீஸ்' என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.

    1999 இல் வெளிவந்த லாஸ்லோவின் போரும் போரும் (War and war) நாவல், கோர் என்ற ஆவணக் காப்பாளரின் கதையை விவரிக்கிறது.

    தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் கோர், தான் கண்டறிந்த ஒரு பண்டைய காவியத்தை உலகறியச் செய்ய புடாபெஸ்ட்டில் இருந்து நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொள்வதாக கதை நகர்கிறது. இந்த படைப்பு லாஸ்லோவின் முற்றுப்புள்ளி இல்லாத நடைக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.

    நீண்ட இடைவெளிக்கு பின் 2016 இல் 'பாரன் வென்கைமின் ஹோம் கமிங்' (Baron Wenckheim's Homecoming) என்ற நாவலை லாஸ்லோ வெளியிடுகிறார்.

    ரஷிய இலக்கிய மேதை தாஸ்தோயெவ்ஸ்கியின் கதை பாணியை பின்பற்றி எழுதப்பட்ட இந்நாவல் சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் குழந்தைப் பருவ காதலை தேடி அர்ஜென்டினாவிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதை நகைச்சுவை மற்றும் சோகத்துடன் விவரிக்கிறது.

     கடைசியாக லாஸ்லோவின் படைப்பாக 2021இல் 'ஹெர்ஷ்ட் 07769' (Herscht 07769) என்று நாவல் வெளிவந்துள்ளது. வழக்கமாக ஹங்கேரியை தனது கதைகளின் களமாக வரிக்கும் லாஸ்லோ இந்த நாவலை ஜெர்மனியின் துரிங்கன் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

    அந்நகரில் நிகழும் கொலைகள், வன்முறை அதனால் சமகாலத்தில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றை பின்னணியாக கொண்டு இக்கதை நகர்கிறது. வன்முறையும் அழகும் ஒன்றிணையும் புள்ளியாக இந்த படைப்பை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    1990கள், மற்றும் 2000 த்தின் முற்பகுதியில் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணங்களின் தாக்கம் குறித்தும் லாஸ்லோ எழுதியுள்ளார்.

    பரவலாக நாவலாசிரியராக கருதப்படும் லாஸ்லோ 2008இல் 'செய்போ தேர் பிலோ' (Seiobo There Below) என்ற சிறுகதை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    மொத்தத்தில் லாஸ்லோ தனிமனித மற்றும் சமூகத்தின் வீழ்ச்சி குறித்தும் நிலையின்மையால் சபிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட மனித இருப்பு குறித்தும் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசிய வண்ணம் உள்ளார் எனலாம். இதையே "நான் பேரழிவைப் பற்றி எழுதுகிறேன்" என்ற லாஸ்லோவின் கூற்றும் தெள்ளிதின் விளக்குகிறது.

    பேரழிவு குறித்து நேர்காணல் ஒன்றில் லாஸ்லோ கூறியவை பின்வருமாறு, "பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும். அது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். பேரழிவு என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தீர்ப்பு"   

    • இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
    • 2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது.

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    முதலாவதாக மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.''

    உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

     அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. 

    2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு  வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    • 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலை விழாவை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.

    இதில் நுண்கலை, இசை, கருவி இசை, தோற்கருவி, துளை காற்று கருவி, தந்திக் கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை வேதாரண்யம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், பள்ளி துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.
    • உத்தரப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியங்களின் நகரம் என்ற UNESCO அந்தஸ்த்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடமே இதற்க்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு மலபார் பகுதியில் உள்ள கோழிக்கோடு நகரம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் வருவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகோயோருக்கு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்து கோழிக்கோடு இந்தியாவுக்குகான நுழைவாயிலாக திகழ்கிறது.

     

     

    இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த காலம் தொட்டு கோழிக்கோடு மலையாள இலக்கியகர்த்தாக்கள் புழங்கும் நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு புத்தக திருவிழாக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டேகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.

     

     

    சுமார் 500 நூலகங்களைக் கோழிக்கோடு தன்னகத்தே கொண்டுள்ளது. எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினார். பல தசாப்தங்களாக கோழிகோட்டில் நடந்து வரும் புத்தக திருவிழாக்கள் அந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில்தான் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

     

    இதைத்தொடர்ந்து கோழிக்கோட்டில் ஜூன் 23 இலக்கிய நகரத்தின் நாள் வருடந்தோறும் கொண்டாடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர்த்து நாட்டுப்புற கலைகள், அலங்காரம், சினிமா, ஊடக கலை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடமே இந்த 350 நகரங்களின் பட்டியல் வெளியான நிலையில் தற்போது அந்நகரங்களின் பிரதிநிதிகள் வரும் ஜூலை 1-5 வரை  யுனெஸ்கோ சார்பில் போர்ச்சுகளில்  நடக்க உள்ள கருதத்தரங்களில் கலந்து கொள்ள உள்ளனர். UNESCO என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆகும். 

    • நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
    • 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு பிரிவிலும் நோபல் பரிசு வென்றவர்கள் யார்யார் என்ற அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த ஹான் காங்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை.
    • மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும்.

    நோபல் பரிசு  

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் [2024] இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார்.

     

    வன்முறை - துயரம்

    53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான ' தி வெஜிடேரியன்' [The Vegetarian] என்ற நாவல் மூலம் உலக அரங்கிற்குத் தெரியவந்தார். இந்த நாவலுக்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர்' சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. ஆணாதிக்கம், துயரம், வன்முறை உள்ளிட்டவற்றைச் சுற்றி ஹான் காங் எழுத்துக்கள் உள்ளன. தி வெஜிடேரியன் நாவல் உணவு சாப்பிட பெண்களுக்கு இருந்த விதிமுறைகளை மறுக்கும் பெண்ணை பற்றிய கதை. இதுபோல 'தி ஒயிட் புக்', 'ஹ்யூமன் ஆக்ட்ஸ்', 'கிரீக் லெசன்ஸ்' ஆகியவையும் ஹான் காங் எழுதிய மற்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.

     

     ஹான் காங் 

    1970 ஆம் ஆண்டு தென் கொரியாவின் குவாங்ஜூ-ல் (Gwangju) பிறந்த ஹான் காங் அரசியல் காரணங்களால் சியோலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது இளமைக் காலத்தை செலவிட்ட அவர் தனது தந்தை மூலம் இலக்கியத்துக்கு அறிமுகமாகிறார்.இவரது தந்தையும் நாவலாசிரியர் என்பதால் சிறுவயதிலிருந்தே இருந்த புத்தகங்கள் சூழ்ந்த சூழலில் இலக்கியத்துக்கு நெருக்கமானவராக ஹான் காங் வளர்ந்தார். வளர்ந்த பின் சியோலில் உள்ள யோன்சேய் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

    1992 முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஹான் காங் அதுமுதல் எண்ணற்ற படைப்புக்களை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். மக்களின் வலி, வரலாறுகள் ஏற்படுத்திய துயரம், இயலாமை ஆகியவை இவரின் படைப்புகளின் சாராம்சமாகும். 2014 ஆம் ஆண்டில் வெளியான ஹியூமன் ஆக்ட்ஸ் என்ற இவரது நாவல் 1980களில் தென் கொரியாவில் ராணுவத்தால் கொல்லப்பட்ட குவாங்ஜு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது ஆகும்.

    தொந்தரவு 

    தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இந்த 53 வயது எழுத்தாளரைத் தென் கோரிய அரசும் மக்களும் கொண்டாடி வருகிறனர். ஆனால் எந்த கொண்டாட்டங்களில் ஈடுபட ஹான் காங் விரும்பவில்லை. நோபல் பரிசு பெற்றது குறித்து எந்த ஊடகத்துக்கும் பேட்டியளிக்க மறுத்துள்ளார். இது அவரின் தீர்க்கமான முடிவு என்று ஹான் காங் தாயார் தெரிவிக்கிறார். உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றில் நடந்துவரும் போர் தனது மகளை மிகுந்த தொந்தரவு செய்துள்ளதாக அவரது  தந்தை கூறியுள்ளார்.

    'போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொலை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?' என தன் மகள் தன்னிடம் கேட்டதாகத்  தந்தை கூறுகிறார். மேலும் உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியைப் பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை.

     

     நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாக இருந்தால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நாம் எழுப்பாமல் இருக்க முடியாது ' என தனது மகள் கூறி கொண்டாட்டங்களுக்கு மறுத்துவிட்டதாகத் தந்தை  கூறுகிறார்.

    ×