search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guruvayur Temple"

    • பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

    அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • குருவாயூர் கோவிலில் நடக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.
    • பிரதமர் வரும் 17-ந்தேதியன்று குருவாயூர் கோவிலில் 65 திருமணங்கள் நடக்கின்றன

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரள மாநிலத்திற்கு வந்தார். ரோடு-ஷோ மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட 2 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    இந்நிலையில் இந்த ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக அவர் வருகிற 16-ந்தேதி கொச்சிக்கு வருகிறார். எம்.ஜி. ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு-ஷோ செல்கிறார்.

    பின்னர் அன்று மாலை 5 மணிக்கு கொச்சி கடற்படை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்பு கொச்சியில் இரவில் நடக்கும் ரோடு-ஷோவிலும் அவர் பங்கேற்கிறார். மறுநாள் (17-ந்தேதி) காலை ஹெலிகாப்டரில் குருவாயூருக்கு பிரதமர் மோடி செல்கிறார். 

    பின்பு குருவாயூர் கோவிலில் நடக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார். அது மட்டுமின்றி குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். காலை 6 மணிக்கு குருவாயூர் கோவிலுக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி 9 மணி வரை அங்கு இருப்பார் என தெரிகிறது.

    பிரதமர் மோடி வந்து செல்லும் வரை குருவாயூர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 9 மணிக்கு பிறகு பிரதமர் புறப்பட்டு சென்ற பிறகே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பிரதமர் வரும் 17-ந்தேதியன்று குருவாயூர் கோவிலில் 65 திருமணங்கள் நடக்கின்றன. அவற்றில் பல திருமணங்கள் காலை நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி வருவதால் காலையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணங்களை வேறு நேரத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த திருமணங்கள் காலை 5 மணி முதல் 6 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் மேலும் 9 திருமணங்கள் என மொத்தம் 48 திருமணங்கள் நடக்க உள்ளன. மற்ற திருமணங்கள் பிரதமர் மோடி வந்துசென்றதும் காலை 9.30 மணிக்கு பிறகு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.
    • குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வந்த அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்பு 32 பவுன்(256கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

    இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும்.
    • நெருக்கடிக்கு தீர்வு காண கோவில் நிர்வாகம் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என யோசித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருமணம் செய்ய வருவார்கள். ஒரு நாளில் 250 திருமணங்கள் வரை நடந்துள்ளது. இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும்.

    முகூர்த்த நாட்களில் இங்கு அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும். அதற்குள் திருமணங்களை நடத்தி முடித்துவிட மணமக்களின் பெற்றோர் நினைப்பதால் கோவிலில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நெருக்கடிக்கு தீர்வு காண கோவில் நிர்வாகம் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் கோவில் தந்திரிகளிடம் கருத்து கேட்டபின்பு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.
    • பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    இங்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்க கோவிலின் மடப்பள்ளியில் பாத்திரங்கள் உள்ளன.

    இதில் தயாரிக்கப்படும் பாயாசம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் கூடுதல் பாத்திரங்களில் பாயாசம் தயாரிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

    இந்த உருளியில் ஒரே நேரத்தில் 1500 பேருக்கு பாயாசம் தயாரிக்க முடியும். இந்த உருளியில் தற்போது முதல் முறையாக பக்தர்களுக்கு பாயாசம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பாயாசத்தையும் அதே பக்தர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குருவாயூர் கோவிலுக்கு ரூ.1,737 கோடிக்கு வங்கியில் டெபாசிட் உள்ளது. இது தவிர கோவிலுக்கு 271 ஏக்கர் நிலங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
    • கோவிலில் சாமிக்கு காணிக்கையாக கிடைத்த ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரக்கற்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி தங்க, வைர, வைடூரியங்கள் இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவலை குருவாயூரை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

    அதற்கு கோவில் நிர்வாகம் அளித்த தகவல் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அதன்படி குருவாயூர் கோவிலுக்கு ரூ.1,737 கோடிக்கு வங்கியில் டெபாசிட் உள்ளது. இது தவிர கோவிலுக்கு 271 ஏக்கர் நிலங்களும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    கோவிலில் சாமிக்கு காணிக்கையாக கிடைத்த ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த வைரக்கற்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டது கேரளாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • எனது நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் வெளியிடவும் திட்டம் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிரண் ஆனந்த் (வயது 34) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

    கிரண் ஆனந்த் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசி. இவர்கள் இருவரும் ரஷியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அப்போது ஆயுர்வேதம் மற்றும் இசை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு வந்தனர். சுமார் 179 வீடியோக்கள் வரை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளனர்.

    இவர்களின் யூ டியூப் வீடியோக்களுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவர்களின் ரசிகர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டது கேரளாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இதுபற்றி கிரண் ஆனந்த் கூறியதாவது:-

    நான் குருவாயூர் கோவிலுக்கான பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இக்கோவிலில் வழிபாடுகள் நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு பூஜைகள் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே அவருக்கு உதவி செய்யவே நான் இங்கு வந்தேன். இப்போது எனக்கு கோவிலின் மேல் சாந்தி பொறுப்பு கிடைத்துள்ளது. இதனை எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன். இப்பணியில் ஈடுபடுவதன் மூலம் இறைவனுக்கு செய்யும் சேவையில் மேலும் ஒருபடி உயரும் என நம்புகிறேன்.

    கோவில் பணிகளில் ஈடுபட்டாலும் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இசை குறித்தும், கலை இலக்கியம் மற்றும் ஆயுர்வேதம் பற்றியும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுவேன்.

    எனது நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் வெளியிடவும் திட்டம் உள்ளது. மேல் சாந்தி பதவி காலம் முடிந்ததும் குருவாயூரில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார்.
    • முகேஷ் அம்பானிக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    சாமி தரிசனம் முடிந்ததும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு காணிக்கையாக ரூ.1 கோடியே 51 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்.

    முகேஷ் அம்பானி வழங்கிய காணிக்கை கோவில் அன்னதான திட்டத்திற்கு செலவிடப்படும் எனக்கூறப்படுகிறது.

    • குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • ஆவணி முதல் ஞாயிறான இன்று கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    இக்கோவிலில் திருமணம் செய்வது தம்பதிகளுக்கு நீடித்த வாழ்க்கையையும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் முகூர்த்த நாட்களில் இங்கு கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

    குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி ஆவணி முதல் ஞாயிறான இன்று கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான ஜோடிகள் முன்பதிவு செய்தனர்.

    200-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்ததால் கோவில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்வதை நிறுத்தியது.

    இதனை கண்டித்து பக்தர்கள் சிலர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, திருமணம் செய்ய விரும்புவோர் அனைவருக்கும் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் கோவிலில் இன்று திருமணம் செய்து கொள்ள கூடுதல் ஏற்பாடுகளை செய்தது. மேலும் ஏற்கனவே இருந்த திருமண மண்டபங்களுடன் கூடுதலாக மண்டபங்களுக்கும் ஏற்பாடு செய்தது.

    கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகளை தொடர்ந்து இன்று ஒரே நாளில் குருவாயூர் கோவிலில் 245 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு வந்த ஜோடிகளுடன் அவர்களின் உறவினர்கள் மற்றும் புகைப்படகாரர் என 20 பேருக்கு மட்டுமே மண்டபத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். இன்று காலை முதலே கோவிலை சுற்றி திருமண ஜோடிகளின் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

    • பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
    • கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது குருவாயூர் கிருஷ்ணன் கோவில்.

    இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவிலில் எப்போதும் இருக்கும்.

    இந்த நிலையில் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோவில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் கோவிலுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் குருவாயூர் கோவிலுக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    இதன் அடிப்படையில் தான் கோவிலுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி உயரமான சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.


    குருவாயூர் கோவிலில் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் திரண்ட உறவினர்கள் கூட்டம்.

    இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோவிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோவிலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவில் அமைந்துள்ள பகுதியில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் திரும்பி வரும் சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன.

    இதன் காரணமாக பக்தர்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் கோவிலுக்குச் சென்று திரும்பினர்.


    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. #Guruvayurtemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் அதிக அளவு நடைபெறும்.

    கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோவிலில் வந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று குருவாயூர் கோவிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

    தை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் இந்த அளவுக்கு திருமணம் அங்கு நடைபெற்று உள்ளது. முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரத்தில் 207 ஜோடிகளும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    இதன் காரணமாக திருமண வீட்டாரும், பக்தர்களும் திரண்டதால் குருவாயூர் கோவிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

    அதேபோல நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் நடந்தது. #Guruvayurtemple
    ×