என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் முறைகேடு"
- கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை.
- குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது.
திருச்சூர்;
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த விலை மதிப்பற்ற பொருட்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடு நடந்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குருவாயூர் தேவஸ்தானத்தின் 2019-20-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-20-ம் ஆண்டு 522.86 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
குருவாயூர் தேவஸ்தான சட்ட விதிமுறைகள்படி, கோவிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை கோவில் நிர்வாகி ஆண்டுதோறும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. அதோடு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.
குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகி உள்ளது. ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குருவாயூர் கோவிலில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த சிலை கடந்த 2015 -ம் ஆண்டு அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கம் முறைகேடு நடந்துள்ளதாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டார். இதன் பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் புகார்தாரர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். 4.75 கிலோ தங்கம் பயன்படுத்தி சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் நவீன கருவியினை வைத்து சிலையை ஆய்வு செய்தனர்.
இதில் சிலையில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலின் செயல் அலுவலர், ஸ்தபதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலையை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த சிலையை கும்பகோணம் கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
கோவிலில் இருந்து சிலையினை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தால் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய வேண்டும்.
இதற்காக கடந்த சனிக்கிழமை (20-ந் தேதி) சிலைக்கு பாலாலயம் என்ற சிறப்பு பூஜை கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை இன்று அதிகாலை 3 மணி அளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்த சிலைகள் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. சாமி சிலைகளுடன் கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் கோயில் குருக்கள் சென்றனர். சிலைகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
சிலைகள் பற்றிய ஆய்வின் முடிவில் ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடுகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews






