என் மலர்
நீங்கள் தேடியது "யானை"
- காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
- 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.
இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
- உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஞ்சி:
சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.
பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
- சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர்.
தளி:
தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அப்படியே நின்றனர்.
நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.
இந்த ஒற்றை யானை சாலை ஓரங்களில் அவ்வப்போது வந்து நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே வாகனங்களை மறிக்கும் இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உணவு பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
- பாகனுடன் யானையைக் காணவில்லை என உரிமையாளர் புகார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது, வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர், பலமு மாவட்டத்தில் உள்ள ஜார்காட் பகுதியில் இருந்து யானையையும், பாகனையும் காணவில்லை. யானையைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், யானைக்கான உரிமை எண்ணையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வன அதிகாரி "பலமுவில் உணவு பற்றாக்குறை காரணமாக, அதன் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். பலமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்தார். அதன்பின் யானையுடன் பாகன் மாயமானார். வன சரக அதிகாரி இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
- மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.
திருச்சி:
வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.
ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.
- ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
- விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.
நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
- அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர்.
- மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டது.
- முதலில் ரயிலின் ஓசையைக் மிரண்ட யானை, பின் வளத்திற்கும் சென்றது
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.
ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது.
- யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார்.
- காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகள் கரும்பை தின்பதற்காக வனச்சாலையில் வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சாலையில் சுற்றி திரிகின்றன.
அவ்வாறு கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்து வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்த ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது. யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார். உடனே யானை லாரியின் முன்பக்கம் நின்று தும்பிக்கையால் கரும்பை எடுத்த போது லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பின்னர் லாரியில் இருந்து கரும்பை எடுத்துக்கொண்டு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை லாரியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன் நகர் கிராமத்தில் ரவி என்கிற விவசாயி தனது வீட்டை ஒட்டி தோட்டம் அமைத்துள்ளார். தோட்டதுக்குள் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் தோட்டத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி மற்ற விவசாயிகளுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானையால் சேதம் அடைந்தன.
- கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த கரும்பை சுவைத்த யானை பின்னர் தானாக வனப்பகுதியில் சென்றது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
- பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவதுடன் அவ்வப்போது சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதுமாக உள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்து வண்டியின் அருகே சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை ஒரு காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் இந்த ரோட்டில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






