என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டது
- காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
- 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.
இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.






