என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

யானைகளின் கால் வலியை போக்க சிறப்பு குளம்- ஒரு மணி நேரம் நீராடி மகிழ்கின்றன
- மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.
திருச்சி:
வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.
ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.






