என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை துரத்தும் ஒற்றை யானை
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






