என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேர்மாளம் அருகே மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்
    X

    கேர்மாளம் அருகே மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்

    • 2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
    • வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்பதும், மிதிப்பதும் என சேதப்படுத்தி வருகின்றன.

    2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூத்தாளபுரம் கிராமத்தில் ரத்தினம்மா என்பவர் விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் விவசாயி ரத்தினம்மா தோட்டத்திற்குள் புகுந்தன. அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானை கூட்டங்கள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தோட்டத்திற்குள் இருந்த யானை கூட்டம் மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்தின.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கூச்சலிட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தனது நீண்டகால விவசாய உழைப்பில் அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானைகள் தின்றுவிட்டு சென்றதால் விவசாயி ரத்தினம்மா மிகவும் வேதனை அடைந்தார்.

    கேர்மாளம் வனச்சரக அலுவலகத்திற்கு யானைகள் அட்டகாசம் செய்வது குறித்து புகாரளித்தால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்வதில்லை, மேலும் யானைகளின் அட்டகாசங்கள் குறித்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.

    எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமெனவும், கிராமத்தை ஒட்டி அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விவசாயி ரத்தினம்மாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×