என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant"

    • சிக்கலி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது.
    • யானை சுற்றி வந்ததால் இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி அடுத்த சிக்கலி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது. விலை நிலங்கள் வழியாக குடியிருப்பு நோக்கி வந்த ஒற்றை யானையை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சிக்கலி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் அருகில் அந்த காட்டு யானை சுற்றி வந்தது. நீண்ட நேரமாக அந்த பகுதியை யானை சுற்றி வந்ததால் இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய அந்த ஒற்றை யானை அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இதை அடுத்து வனத்துறையினர் அதிக சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

    • தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.
    • மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை சுற்றி அமைந்துள்ள அடர் வனப்பகுதிகளில் குட்டிகளுடன் வசிக்கும் காட்டு யானை கூட்டம் பருவமழை காலங்களின் போது வழக்கமான வலசை பாதை வழியே ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக இடம் பெயர்வது வழக்கம்.

    தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள இலை, தழை, புற்கள் அழுகி விடுவதால் அவை மாற்று உணவு தேடி இடம் பெயர தொடங்குகின்றன.

    ஒரே வகையான உணவுகளை உண்பதால் குடற்புழு உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மாற்று உணவை தேடி காடுகளை விட்டு சமவெளி பகுதியை கடந்து செல்கிறது.

    இதேபோன்று வலசை பாதைகளில் பயணிக்கும் யானைகள் தங்களுக்கு பிடித்தமான மாற்று உணவினை கண்டுவிட்டால் அவற்றை ருசி பார்க்க தவறுவதில்லை.

    நேற்றுமுன்தினம் மாலை முடீஸ் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானை சுற்றியது. தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.

    பின்னர் மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    தொடர்ந்து கால்களால் அந்த பழத்தை இரண்டாக பிளந்து அதில் இருந்த பலாச்சுளைகளை எடுத்து தனது குட்டிக்கு கொடுத்து, தானும் உண்டு மகிழ்ந்தது. இந்த காட்சியை அருகே தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

    • வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
    • தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையை நோக்கி படையெடுக்கின்றன. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்பு துண்டுகளை தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை தேடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் நடமாடிய ஒற்றை யானை அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டு இருக்கிறதா? என ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி பார்த்து வந்தது.

    அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை இந்த ஒற்றை யானை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. பின்னர் தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ருசி பார்த்தது. யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநர் லாபகரமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதியில் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பூதப்பாண்டி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான மோதிரமலை, குற்றியார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் இன்று காலையில் யானை ஒன்று அந்த பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

    அதில் பங்குதந்தை வசித்து வருகிறார். இன்று காலை அங்கு வந்த யானை அவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பங்குத்தந்தை தொலைபேசி மூலமாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை விரட்டினார்கள். ஆனால் யானை செல்லவில்லை. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானை அங்கிருந்து விரட்டினார்கள். அங்கிருந்து சென்ற யானை சிறிது தூரம் சென்று நின்று கொண்டிருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யானை திடல், தெள்ளந்தி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்திருந்த நிலையில் தற்போது கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் புகுந்து சேதப்படுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று புகுந்து பொது மக்களை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
    • கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-

    கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில்லி கொம்பன் என்ற யானை வனத்தை விட்டு வெளியேறி ஆழியார் பகுதிக்குள் நுழைந்தது.
    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் கட்டப்படிருந்த சுற்றுச்சு வரை யானை இடித்திருந்தது.

    ஆனைமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது.

    இதனால் வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி வால்பாறை-ஆழியார் சாலையில் உலா வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றி திரிகின்றன.

    இதுதவிர வனவிலங்குகள் வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. வீடுகள், விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சில்லி கொம்பன் என்ற யானை வனத்தை விட்டு வெளியேறி ஆழியார் பகுதிக்குள் நுழைந்தது.

    அந்த பகுதியிலேயே வெகுநேரமாக சுற்றிய யானை, அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் இருந்த மணிமண்டபத்தின் அருகே வந்தது.

    அந்த மணி மண்டபத்தின் சுற்றுச்சுவரை சில்லி கொம்பன் யானைஇடித்து தள்ளியது. இதில் சுவரில் இருந்த கம்பிகள் அப்படியே சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. அதன்பிறகு உள்ளே நுழைந்த யானை மணிமண்டபவளாகத்தில் நின்றிருந்த மாமரத்தை தனது துதிக்கையால் ஒடித்து மாங்காய்களைருசித்தது.

    பின்னர் யானை அங்கிருந்து நகர்ந்து ஆழியார் விருந்தினர் மாளிகை அருகே முகாமிட்டுள்ளது. தற்போது யானை அங்கு நின்று கொண்டிருக்கிறது. யானை நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் கட்டப்படிருந்த சுற்றுச்சு வரை யானை இடித்திருந்தது. தற்போது மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து தள்ளியுள்ளது.

    • வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது.

    வால்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நண்பர்கள் 2 பேரும் கொடுங்கலூரில் இருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு புறப்பட்டனர்.

    அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர். ஆணகயா என்ற இடத்தில் வந்த போது சாலையில் யானைகள் கூட்டம் நின்றிருந்தது.

    இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டனர்.

    சாலையில் நின்றிருந்த யானைகள் கூட்டம் திடீரென இவர்களை நோக்கி வேகமாக வந்தன.

    இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை அந்தந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.

    யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது. வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நடமாடிய யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். பின்னர் வாகனத்தையும் மீட்டனர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

    யானைகள் கூட்டம் சாலையில் வழிமறித்து நிற்பதையும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவதையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    கடந்த 2 தினங்களாக முலுக்கப்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லக்கூடிய சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கிறது. எனவே வனத்துறையினர் மிக கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கனரக வாகனங்களுக்கு பின்னால் சிறிய வாகனங்கள் வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
    • யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.

    வடவள்ளி:

    கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.

    திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.

    இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் குட்டி யானை, தாய் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் இருந்தது. யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.

    மேலும் குட்டி யானை, தாய் யானையின் மேல் படுத்துக் கொண்டு தனது முழு பலத்தையும் காட்டி எழுப்ப முயன்றது. அம்மா எழுந்திரும்மா, எழுந்திரும்மா... என்பது போல் அந்த குட்டி யானையின் செயல்கள் இருந்தன. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண் போரை கண் கலங்கச் செய்தது.

    வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பார்த்தனர். ஆனால் குட்டி யானை அங்கிருந்து நகராமல் தனது தாயை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தது. குட்டி யானை வழிவிட்டால் தான் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதுபற்றி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்களது உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து கும்கி யானை ஒரியன் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் கால்நடை மருத்துவர் விஜயன் என்பவரும் வந்தார். கும்கி யானை உள்ளே புகுந்து குட்டி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் குட்டி யானை அங்கிருந்து ஓடி வெகுதூரத்தில் போய் நின்றது.

    இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் நிறுத்தினர். யானைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரைகள் உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனை உட்கொண்ட யானை உடல் நலம் தேறி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    குட்டி யானை தொடர்ந்து தாய் யானையை கண்காணித்தபடியே சுற்றித்திரிகிறது. இந்த உருக்கமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன.
    • வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வ தும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சோதனை சாவடி அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாங்க ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை காரணமாகவும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்துவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் அந்தியூர், வெள்ளித் திருப்பூர் அருகே மோத்தங்கல்புதூர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. விவசாயிகள் விரட்ட முயன்றால் துரத்தி தாக்க முயல்கிறது.

    இது தவிர தோட்டத்து பகுதியில் வீட்டை சுற்றி வளர்க்கப்படும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சென்னம்பட்டி வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த 10 நாட்களில் அய்யன் தோட்டத்தை சேர்ந்த ராஜா, சோமு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை, எலுமிச்சை மற்றும் கரும்பை ஒற்றை யானை தின்று சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-, கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை. எலுமிச்சம்பழம் போன்றவற்றை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    நாங்கள் பட்டாசுகளை கொண்டு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லும் யானை மீண்டும் சிறிது நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தூக்கத்தை இழந்தும் நிம்மதியை இழந்தும் தவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.

    காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு, பட்டாசுகள் வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×