என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
    X

    வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு

    • திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×