என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி"
- இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
- விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி:
கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
- பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
- நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தின.
இதற்கிடையே பருவமழை காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலை மாறியது, இருந்த போதிலும் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டும், சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து அங்குள்ள வீடுகளில் கால்நடைக்கான தீவனங்களை தின்றும் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதன்காரணமாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஊருக்குள் யானைகள் வராமல் தடுத்து நிறுத்த வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டத்திற்கு முன்பு நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு ஒற்றை காட்டு யானை உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் முன்பாக அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
- போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தி.மு.க. அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி. ராஜேந்திரன், முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, காத்தவராயன் உள்பட ஏராளமான 1000-கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் மா கொள்முதல் விலை கிலோவுக்கு 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாங்குழுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தங்கமுத்து, கேசவன், சோக்கடிராஜன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
- கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-
கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது.
- சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்பொழுது ஐ.டி.பி.எல். பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே மீண்டும் கியாஸ் பைப் பதிக்கின்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.
முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கோவை மாவட்டம் இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டத்தை ஐ.டி.பி.எல்.நிறுவனம் கைவிட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
அப்போது அந்த வளாகத்தில் அவர் தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை போலீசார் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர், மே. 29-
வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்த வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு இந்த ஏரி நிரப்ப்படும்.
மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். கோடை வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.65 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் 9 அடி நீர் மட்டம் உள்ள கீழணையில் தற்போது 3.6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
- காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
- யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று இரவு தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஒன்று திரண்டு சத்தம் போட்டு, பட்டாசுகள் வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தினமும் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
- சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம், தசர குடேமை சேர்ந்தவர் சித்தைய்யா (வயது 45). இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சித்தைய்யா விவசாய நிலத்துக்கு சென்றார்.
இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
சித்தையா விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்து யானை ஒன்று பிரிந்து வந்தது. சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த யானை சித்தய்யாவை துரத்தியது. யானை விரட்டுவதை அறிந்த அவர் அதனிடமிருந்து தப்பித்து ஓடினார். விடாமல் துரத்திய யானை சித்தைய்யாவை தூக்கி போட்டு காலால் மிதித்து கொன்றது. வனத்துறையினர் அவருடைய உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்தார்.
- லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
- பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.
சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.
சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.
இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.
அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






