என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி உயிரிழப்பு"

    • காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.

    காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது அந்த வளாகத்தில் அவர் தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை போலீசார் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
    • மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

    இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.

    மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.

    அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×