என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி போராட்டம்"
- பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
- நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம்
- பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் விவசாயி.
இவரது வீட்டின் அருகே மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது மேலும் மழைநீர் துர் நாற்றம் வீசி வருகிறது.
இது சம்பந்தமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி மாணிக்கம் தனது வீட்டின் எதிரில் தேங்கியுள்ள மழைநீரில் அமர்ந்து மழைநீர் அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயி மழைநீரில் அமர்ந்து எழுந்து சென்றார்.
இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடைய நிலம் என கூறி தகராறு செய்தார்.
- அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு(வயது 80). இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் பச்சை பெருமாள்புரம் கிராமம் அருகில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டினர்.
அப்போது அங்கு செவல்குளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவர் வந்தார். அவர் சுடுகாடு அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடைய நிலம் என கூறி தகராறு செய்தார். அங்கிருந்தவர்கள் அதனை மறுத்தனர்.
இதனால் அவர் திடீரென அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவரது கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இறந்தவரின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அவரை குழியில் இருந்து வெளியே வருமாறு கூறியும் மாரியப்பன் மேலே வர மறுத்துவிட்டார். சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் குழிக்குள் படுத்து கொண்டு போராட்டம் நடத்தியதால், ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் போராட்டம் நடத்திய மாரியப்பனை வெளியே வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இறந்தவரை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்தனர். அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாரியப்பனை கண்டித்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு பின் இறந்தவரின் உடல் அந்த குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
- சக்கராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை நீண்ட காலமாக குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார்.
- லட்சுமணன் டவரை விட்டு இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அய்யம்பேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பெருமாக்கநல்லூர் தென்னங்குடியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது49) விவசாயி.
இவர் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை நீண்ட காலமாக குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார். இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் லெட்சுமணனிடமே நிலத்தை விற்பதாக கூறி ரூ.13 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் அதே நிலத்தை இன்னொருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விவசாய நிலத்தை மீண்டும் எனக்கே தர வேண்டும். இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய ரூ.13 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறி இன்று காலை லெட்சுமணன் அய்யம்பேட்டை சாவடி பஜார் அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் டவர் மீது திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா தலைமையிலான போலீசார் கீழே இருந்தவாறு ஒலிப்பெருக்கி மூலம் லட்சுமணனணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிலத்தை குத்தகைக்கு விட்டு பணத்தை பெற்ற உரிமையாளர் நேரில் வந்தால் மட்டுமே டவரை விட்டு கீழே இறங்குவேன் என்று கூறி லட்சுமணன் டவரை விட்டு இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் சாமி. இவர் கணியம்பாடி ஒன்றிய விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார்.
இன்று காலை பழைய பஸ் நிலையம் வந்த ஜெய் சாமி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு அரை நிர்வாண நிலையில் அமர்ந்து நெற்பயிரை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் காட்டுப்புத்தூர் அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள ஏரி வண்டல் மண்ணை அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்திச் சென்று கிணறு போல் வெட்டி அதில் பதுக்கி வைத்துள்ளனர்.
ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் வண்டல் மண்ணை பதுக்கி வைப்பதால் விவசாயத்திற்கு வண்டல் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் ஜெய் சாமி தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






