search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone tower"

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ‘எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.
    • கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் பிச்சம்பாளையம் வாழைத்தோட்டம் பாரதிநகர் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் 'எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.

    இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. காற்று அதிகமாக வீசும் காலம் என்பதால் இந்த கோபுரம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் அதிகப்படியான கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    • மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    மேலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து செல்கின்றனர். சில நாட்களாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்நிலையில் பலத்த சூறாவளி காற்றால், மாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் திடீரென முறிந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் செல்போன் டவர் சேதமடைந்து அப்பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்து டவரை சரி செய்ய வேண்டுமென தேயிலை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். இதேபோல் 2 நாட்க ளுக்கு முன்பு அங்கு சாலையின் குறுக்கே ராட்சத மரமும் முறிந்து விழுந்த நிலையில் அதை அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சிஅலுவலகம் துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மூன்றாவதாக இதன் அருகில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் செல்போன் டவரினால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு பள்ளி குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யும் இடத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
    • கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    பள்ளி, கல்லுாரி மாணவியர், போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிபட்டு வந்தனர்.

    இதையடுத்து மேலூரில், பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை குழு உறுப்பி னர் தங்கராஜ் கூறுகையில், ஜருகுமலை, அதன் அடி வாரத்தில் உள்ள நில வாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக் கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஜருகு மலையில் செல்போன் கோபுரம் அமைத்தால் சிக்னல் கிடைக்கும் என பார்த்திபன் எம்.பி.யும் பரிந்துரைத்தார்.

    அதன்படி செல்போன் கோபுரம் அமைக்கப்படு கிறது என்றார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
    • செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய 3பேருக்கும் சொந்தமான நிலம் உள்ளது.

    இவர்களது இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனம் செல்போன் டவர் ஒன்றை அமைத்தது. இதற்காக முறையாக ஒப்பந்தம் போட்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் வாடகை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த 6ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள செல்போன் டவர்களை அவ்வப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்து பராமரித்து வந்தனர். கடந்த மாதம் வழக்கம் போல கோயம்பேடு வடக்கு மாட வீதியில் அமைக்கப்பட்டு உள்ள டவரை ஆய்வு செய்துவிட்டு சென்று இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஊழியர்கள் அங்கு சென்றபோது செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து செல்போன் நிறுவன மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் வாடகை பணம் தராததால் செல்போன் டவரை பிரித்து நில உரிமையாளர்கள் விற்று இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து சந்திரன் உள்ளிட்ட 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் டவர் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அதை பிரித்து இரும்பு கடையில் விற்று விட்டதாக உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செல்போன் கோபுரத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். வாடகை பணம் செலுத்தாததால் செல்போன் டவரை கழற்றி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேத்தூரில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உபகரணங்கள் திருடு போயின.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    சென்னையை சேர்ந்தவர் முத்து வெங்கடகிருஷ்ணன் (வயது 52). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது நிறுவனம் சார்பில் 2009-ம் ஆண்டு ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள முகவூர் ரோட்டில் செல்போன் டவர் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அந்த டவர் செயல்பாடின்றி இருந்தது.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் செல்போன் டவரில் இருந்த விலையுயர்ந்த பேட்டரிகள், மின் சாதனங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 26 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
    • சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கை யை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமா னோர்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    அடிப்படை வசதிகள்

    ராமையன்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்டுக்குட்பட்ட சிவாஜி நகர், அரசு புதுகாலனி, சைமன் நகர், ஷகி நகர் உள்ளிட்ட பகுதியில் 165 தெருக்கள் உள்ளது. இதில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே உடனடியாக அதனை நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    செல்போன் டவர்

    டவுன் சாலியர் தெருவை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறோம். திருவள்ளுவர் தெருவில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கை யை கைவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இந்திய தேசிய லீக் கட்சி அமைப்பு செயலாளர் சிக்கந்தர் துல்கர்னி கொடுத்த மனுவில், மேலப்பா ளையம் குறிச்சி முதல் ரெட்டியார்பட்டி செல்லும் புறவழிச்சாலைகளை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். மேலப்பாளையம் விரிவாக்க பகுதிகளான பீடி காலனி, ரஹ்மான் தாஜ் நகர், அமுதா பேட், பிறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
    • குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பொதுமக்கள் சாா்பில் என்.மாணிக்கராஜ், சிவகுமாா் ஆகியோா் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -

    ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இந்தப் பகுதியில் காவல் நிலையம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் தனிநபா் ஒருவா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவா்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.இந்த பகுதியை சுற்றிலும் ஏற்கெனவே 3 செல்போன் கோபுரங்கள் உள்ளன. ஆகவே, குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்போன் கோபுரம் மாயமான வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து வேங்கடகிருஷ்ணன் (55). இவர் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம், மதுரை தோப்பூரில் ரூ.29 லட்சம் செலவில் செல்போன் ேகாபுரத்தை அமைத்தது.

    இதனை தொழில்நுட்ப ஊழியர் சிவகுமார் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் தோப்பூருக்கு சென்றார். அங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்த செல்போன் கோபுரத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் சென்னை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தோப்பூரில் கோகிலா என்பவருக்கு சொந்தமான நிலத்தில், செல்போன் நிறுவனம் கோபுரம் அமைத்து இருந்தது.

    இதற்காக அந்த நிறுவனம், கோகிலாவுக்கு வாடகை செலுத்தியது. அந்த நிறுவனம் சில ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தவில்லையாம். இந்த நிலையில் செல்போன் டவர் மாயமாகி உள்ளது. இந்த சம்பவத்தில் கோகிலா தரப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்து, திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேர்மாளம் பஞ்சாயத்தில் கேர்மாளம், சி.கே.பாளையம், ஜோகனூர், ஜெ.ஆர்.எஸ்.புரம், கானகரை, குடியூர், சி.பி.தொட்டி, ஒருத்தி, தலுதி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம்.

    இப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லை. இங்கு, 10-ம் வகுப்பு வரை உள்ள 5 பள்ளிகள் செயல் படுகின்றன. கொரோனா காலத்தில் இங்குள்ள பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியவில்லை.

    அங்கிருந்து 12 கி.மீ., தூரம் சென்றால் கர்நாடகா மாநிலத்தின் டவர் இணைப்பு கிடைக்கும். அல்லது 9 கி.மீ. மலைப்பகுதியை கடந்தால் சத்தியமங்கலம் டவர் கிடைக்கும். 

    ஆனால், மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை. குன்றி, திங்களூர் பகுதியில் தனியார் டவர் தற்போது அமைத்துள்ளனர்.

    திங்களூரில் 'ஏ' கிராமப் பகுதியில் தனியார் டவர் இருந்தும், கேர்மாளம் பகுதியில் பயன்படாது. எனவே இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.
    • மோசடிச் செயலை கண்டால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம்.

    செல்போன் டவர்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கான மத்திய தொலைத்தொடர்புத் துறை, எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    செல்போன் டவர்களை நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், தனிநபர்கள்,அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதில் தொலைத் தொடர்புத்துறை மற்றும் டிராய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை. அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம்,ஏஜென்சி, தனிநபர் பணம் கேட்டால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவும், நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்கவும்.

    இதுபோன்ற மோசடிச் செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகாரளிக்கலாம். மேலும் கூடுதலாக, தொலைத் தொடர்புத்துறையின் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×