என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டங்களில் திரியும் ஒற்றை யானை
- காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தின.
இதற்கிடையே பருவமழை காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலை மாறியது, இருந்த போதிலும் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டும், சுற்று வட்டார கிராமங்களில் புகுந்து அங்குள்ள வீடுகளில் கால்நடைக்கான தீவனங்களை தின்றும் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதன்காரணமாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஊருக்குள் யானைகள் வராமல் தடுத்து நிறுத்த வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டத்திற்கு முன்பு நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு ஒற்றை காட்டு யானை உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் முன்பாக அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.