என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சேதப்படுத்திய யானைகள் கூட்டம்
    X

    வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சேதப்படுத்திய யானைகள் கூட்டம்

    • வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது.

    வால்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நண்பர்கள் 2 பேரும் கொடுங்கலூரில் இருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு புறப்பட்டனர்.

    அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர். ஆணகயா என்ற இடத்தில் வந்த போது சாலையில் யானைகள் கூட்டம் நின்றிருந்தது.

    இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டனர்.

    சாலையில் நின்றிருந்த யானைகள் கூட்டம் திடீரென இவர்களை நோக்கி வேகமாக வந்தன.

    இதனால் அதிர்ச்சியான நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை அந்தந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டனர்.

    யானைகள் கூட்டம் மோட்டார் சைக்கிளின் அருகே வந்து அதனை காலால் மிதித்து சேதப்படுத்தியது. வெகுநேரமாக சாலையிலேயே யானை கூட்டம் சுற்றியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நடமாடிய யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். பின்னர் வாகனத்தையும் மீட்டனர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

    யானைகள் கூட்டம் சாலையில் வழிமறித்து நிற்பதையும், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்துவதையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    கடந்த 2 தினங்களாக முலுக்கப்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லக்கூடிய சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து நிற்கிறது. எனவே வனத்துறையினர் மிக கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கனரக வாகனங்களுக்கு பின்னால் சிறிய வாகனங்கள் வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×