என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் ரெயில் நிலையம் பகுதியில் இரச்சகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பூசாரிகளாக பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சாமிக்ககான பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வைத்திருக்கும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்த 3 ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திபட்டை, மூக்கு பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் என சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    மேலும் கோவில் கதவின் பூட்டு உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரையும், உடைக்கப்பட்ட பூட்டும் அருகிலேயே கிடந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கேமராக்கள் எதுவும் இல்லாததால் அருகில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதேபோல் நேற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 23 வைகுந்தம் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 85,740 பேர் தரிசனம் செய்தனர். 35,555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
    • தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையை நோக்கி படையெடுக்கின்றன. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்பு துண்டுகளை தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை தேடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் நடமாடிய ஒற்றை யானை அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டு இருக்கிறதா? என ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி பார்த்து வந்தது.

    அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை இந்த ஒற்றை யானை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. பின்னர் தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ருசி பார்த்தது. யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநர் லாபகரமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதியில் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
    • பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஆக்டோபஸ் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 16 மணி நேரம் ஆனது.

    நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் உள்ள சீலா தோரணம் வகை சுமார் 5 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர்.

    இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம், மற்றும் ஸ்ரீனிவாசன் மையங்களில் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற அலைமோதினர்.

    இன்று காலையில் ஓரளவு கூட்டம் குறைந்தது. பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால், மறுநாள் அறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறை வழங்கும் மையங்கள் அருகில் உணவு சாப்பிட்டு அங்கேயே தூங்கினர்.

    அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 80,193 பேர் தரிசனம் செய்தனர். 33, 298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.

    வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம், 4 மாட வீதிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

    இதனால் திருப்பதி கோவிலில் இருந்து என்.ஜி.செட் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 90, 802 பேர் தரிசனம் செய்தனர். 35,776 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன.
    • வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வ தும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சோதனை சாவடி அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாங்க ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் உள்ளது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.

    அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான். அதில், அவனுடைய கை உண்டியலில் சிக்கி கொண்டது. பின்னர் கையை வெளியே எடுக்க முடியாமல் அவன் விடிய, விடிய கோவில் வளாகத்திலேயே இருந்தான். நேற்று காலை அந்த வழியாக கிராம மக்கள் சென்றனர்.

    அப்போது கோவில் உண்டியலில் திருட முயன்ற திருடனின் கை சிக்கி கொண்டதை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவன், சேசம்பட்டி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது42) எனவும், உண்டியலில் பணத்தை திருட முயற்சித்து கை சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை உடைத்து திருடனின் கை எடுத்தனர். இதையடுத்து தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்த னர்.

    கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கோவிலில் உண்டியலில் பணத்தை திருட முயன்றபோது கை சிக்கி கொண்டதால் விடிய, விடிய தவித்த திருடன் பரிதாபமாக சிக்கி தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
    • காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சோதனை சாவடி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றி வருகிறது.

    வனத்துறையினர் பட்டாசை வைத்து விரட்டினாலும் சிறிது நேரம் மீண்டும் சாலையோரம் வந்து விடுகிறது. காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதனால் பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதைப்போல் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனங்களை வழிமறிப்பது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.

    தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே கோவில் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    • கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
    • வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.

    நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    7-ம் நாளான வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டமும் 6-ந்தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.

    தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.

    • விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    விழாவின் முதல் நாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி திருமண கோலத்தில் பாமா ருக்மணியுடன் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது கோவில் யானை செங்கமலம் வெண்சாமரத்தை தும்பிக்கையில் ஏந்தி ராஜகோபால சுவாமிக்கு வீசி, வணங்கியவாறு 3 முறை சுற்றி வந்தது. தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களும் இசை வாத்தியங்கள் முழங்க தனி நடையுடன் ராஜகோபால சுவாமி முன் தோன்றினர்.

    வழக்கமாக பூர்வாங்க பூஜையின் போது பட்டாச்சாரியர்கள் தான் உற்சவர்களுக்கு சாமரம் வீசி வணங்குவர். ஆனால், கோவில் யானை சுவாமிக்கு சாமரம் வீசியது அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×