என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
- கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் ரெயில் நிலையம் பகுதியில் இரச்சகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பூசாரிகளாக பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சாமிக்ககான பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வைத்திருக்கும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்த 3 ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திபட்டை, மூக்கு பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் என சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் கோவில் கதவின் பூட்டு உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரையும், உடைக்கப்பட்ட பூட்டும் அருகிலேயே கிடந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கேமராக்கள் எதுவும் இல்லாததால் அருகில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






