search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandalur park"

    • தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    வண்டலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
    • தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.

    அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.


    இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
    • பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாள் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்காவில் குவிந்து இருந்தனர். இதனால் பூங்கா முழுவதும் கூட்டம் களை கட்டியது. வார இறுதி விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

    கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது (டிசம்பர் 24,25 மற்றும் 26-ந்தேதிகளில்) 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். இதேபோல் புத்தாண்டு வார இறுதியிலும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    • கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
    • மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    புயலின் தாக்குதலுக்கு வண்டலூர் பூங்காவும் தப்ப வில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 30 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் 5 இடங்களில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த சுற்றுச்சுவர் சீரமைப்பு மற்றும் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    புயல் மற்றும் கனமழையின் போது பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அதன் இருப்பிடங்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 30 மரங்கள் விழுந்து உள்ளன. கனமழையின் போது பூங்கா ஊழியர்களால் சிலர் பணிக்கு வர முடியவில்லை என்ற போதிலும் பூங்காவில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளின் அடைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை மற்றும் அனைத்து அடைப்புகளும் அப்படியே பாதுகாக்கப்பட்டன.

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள சுவர்களில் 4 இடங்களில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்து உள்ளன. பூங்காவிற்குள் அருகில் உள்ள ஓட்டேரி ஏரியும் நிரம்பி தண்ணீர் வந்ததால் 30 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பூங்காவின் நடைபெறும் “வனவிலங்கு வார” கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன.
    • ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனோ தொற்று பரவல் முடிந்து வழக்கமாக பூங்கா திறக்கப்பட்டதும் வாகனத்தில் சிங்கங்களை பார்வையிடம் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2-ந்தேதி வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. அன்று பூங்காவின் நடைபெறும் "வனவிலங்கு வார" கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்து திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை பார்க்கலாம். ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி வருகிற 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 3 ஏ.சி. பஸ்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகன த்தில் செல்ல ஒருவருக்கு ரூ.150 கட்டணமாக இருக்கும். இதன் மூலம் பூங்காவில் வருவாய் மேலும் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தற்போது பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்படுகின்றன.

    அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது. 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படும்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. சக்கர நாற்காலிக்கான ரூ.25 கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோக கேமராவுக்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா பதிவுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது.

    வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பூங்கா அதிகாரிகள் ரமேசை அழைத்து பூங்காவில் அதிகமாக மின்சாரம் பயன்பாட்டிற்க்கு நீங்கள் தான் காரணம் என்றும் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற உள்ளதால் இது குறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த ரமேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தனது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பூங்கா அதிாகரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    • வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • தொழிலாளர்களின் போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயோமெட்ரிக் முறையை, ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வண்டலூர் பூங்காவில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. உயிரியல் பூங்கா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளரும், ஏ. ஐ சி. யூ. டி.யூ மாநில சிறப்புத் தலைவருமான இரணியப்பன் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, பூங்காவில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    • மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

    பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி-கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து உள்ளனர்.

    இந்த மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்த நாள் ஆகும். இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

    மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் " முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா..." என்று எழுதப்பட்டு இருந்தது.

    பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.

    அந்த கேக்கை ஆதித்யா குட்டியுடன் சேர்ந்து மனித குரங்குகள் ருசித்து சாப்பிட்டன. இந்த வீடியோ காட்சியை வண்டலூர் பூங்கா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    ×