search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை விடுமுறை: சுற்றுலா தலம்-பொழுதுபோக்கு பூங்காக்களில் குவியும் மக்கள்
    X

    கோடை விடுமுறை: சுற்றுலா தலம்-பொழுதுபோக்கு பூங்காக்களில் குவியும் மக்கள்

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    Next Story
    ×