search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourism"

    • அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கவுகாத்தி:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

    இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
    • கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பஸ், சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.

    மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஹோட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

    சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது.

    கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓய்வுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவார்கள்
    • உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பித்தான் உள்ளது

    கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).

    இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.

    சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.


    பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

    ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.

    இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.

    புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.

    உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.
    • டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ரெட்எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியும், புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டிகள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. காலை 7 முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை, ஆரோவில்லை சேர்ந்த தலை சிறந்த 40 வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

    போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.

    டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. முதலிடம் பெறுபவருக்கு தேசிய சாம்பியன்ஷிப் பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா வருகிற ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என குதிரையேற்ற பயிற்சி பள்ளி நிறுவனர் ஜாக்லீன் தெரிவித்துள்ளார்.

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.
    • பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

    இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் பாலத்தின் முடிவு பகுதியில் 11 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் நின்று கடல் அழகு மற்றும் அலையை ரசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், வர்க்கலா நகராட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.

    இந்த மிதக்கும் பாலத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் செல்ல முடியும். தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் நடந்து சென்று ரசிக்கலாம். இந்த பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    மிதக்கும் பாலத்தின் நுழைவு கட்டணம் ரூ120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் 20 நிமிடங்கள் பாலத்தில் நேரத்தை செலவிடலாம்.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு படகுகள் மட்டுமின்றி உயிர்காக்கும் காவலர்கள், மீனவர்கள் தயார் நிலையில் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.
    • உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார தொடர் நிகழ்வுகளின் நிறைவாக இன்று இந்திய சுற்றுலாவுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நடைபெற்ற பாரம்பரிய சுற்றுலா நிகழ்வினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

    இந்த சுற்றுலாவில் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், இன்டாக் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட 50 நபர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு பெற்ற இடங்களான திருப்பா லைத்துறை நெற்களஞ்சியம், திருப்புள்ளமங்கை கோவில், திருவையாறு காவிரி படித்துறை, திரிச்சினம்பூண்டி கோவில், ஒரத்தநாடு முத்தாம்பால் சத்திரம், மனோஜிபட்டி உப்பரிகை, ராஜா கோரி கைலாஷ் மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கண்டு பயன் அடைந்தனர்.

    இந்த பாரம்பரிய சுற்றுலாவினை வரலாற்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ், தொல்லியல் பாதுகாவலர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் வழி நடத்தினர்.

    • சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்குபவர் , பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆப்ரேட்டர் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். அப்படி முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு 5 நாட்களுக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
    • விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் மாநிலங்களுக்கிடையேயான பட்டறிவு சுற்றுலாவிற்கு பேருந்து மூலம் அழைத்துசெல்லப்பட்டனர்.

    ஒழுங்குமுறை விற்ப னைக்கூட நடைமுறைகள் மற்றும் மின்னனு தேசிய வேளாண் சந்தை தொடர்பாக பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் 5 நாட்களுக்கு ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மிளகாய் சந்தையான ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்துசெல்லப்பட்டனர்.

    அங்கு ஆந்திராவில் பயிரப்படும் மிளகாய் இரகங்கள், பயிரிடப்படும் பருவங்கள் பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை படுத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் நேரில் கண்டு விவரங்கள் கொண்டு அறியபெற்றனர்.

    விவசாயிகள் மிளகாயை எவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    சந்தைப்படுத்தும் முறைகள்தரம் நிர்ணயம், விளைபொருளுக்கு ஏற்ற விலை நிரணயம் செய்தல் மின்னனு தரம் நிர்ணயம், தர சான்று பெறுதல் தேசிய வேளாண் சந்தை இணைய தளத்தில் பதிவு செய்தல், வியாபாரிகளை எவ்வாறு தொடர்பு கொள்ளுதல், விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினம் தங்குமிடம் மற்றும் இந்த சுற்றுலாவிற்கு உணவு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

    விவசாயிகளை பாபநாசம் வட்டாரம் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் பாபநாசம் தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் திரிபுரசுந்தரி விவசாயிகளை அழைத்து சென்றிருந்தனர்.

    • பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
    • மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர்.

    கடலூர்:

    சென்னை மற்றும் புதுவைக்கு ஏராளமான வெளிநாட்டினர் நேரில் வருகை தந்து, அதன் பின்பு சிதம்பரம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் வழியாக சென்ற வெளிநாட்டினர் கடலூர் உழவர் சந்தைக்கு சென்றனர். பின்னர் அங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த பழ வகைகளை வாங்கி ருசித்து பார்த்தனர்.

    காய்கறிகள் வாழைத்தார்கள் போன்றவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை நடப்பது குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனை வெளிநாட்டினருடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டு வெளிநாட்டினருக்கு கூறினார். மேலும் வெளிநாட்டினர் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் மகிழ்ந்தனர். 

    • சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
    • அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்தும் சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.

    நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே இனி இந்த 7 நாடுகளில் இருந்தும் இலங்கை செல்ல விசா தேவையில்லை.

    பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    ×