என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவாளி"

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார்.
    • சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன.

    2014 முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா அஜித் தோவல் உள்ளார்.

    1968 கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான தோவல் பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார். 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடைவடிக்கைகளில் பங்காற்றியுள்ளார்.

    அண்மையில் டெல்லியின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய தோவல், " நான் இணையத்தை பயன்படுத்துவதில்லை.

    தனிப்பட்ட குடும்ப விஷயங்களுக்காகவோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தவிர, நான் போனைப் பயன்படுத்துவதில்லை.

    செல்போன் மற்றும் இணையம் இல்லாமலேயே எனது பணிகளை என்னால் திறம்படக் கையாள முடிகிறது. சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.

    அஜித்தோவல் பெயரில் சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள் உலா வருகின்றன. இது குறித்துப் பேசிய அவர், தனக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கும் இல்லை என்று தெரிவித்தார்.

    நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஒட்டுக் கேட்பு போன்ற அபாயங்களைத் தவிர்க்க அவர் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார் என்று கருதப்படுகிறது.  

    • அந்த மோதிரங்களில் ரஹ்மத் சர்க்கார் மற்றும் ரிஸ்வான் 2025 என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
    • புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று, ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.

    அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.

    சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.

    அந்த மோதிரங்களில் 'ரஹ்மத் சர்க்கார்'  மற்றும் 'ரிஸ்வான் 2025' என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

    புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

    அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
    • 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குகிறார்கள்.

    பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

    பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.

    அவர்களுக்கு இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து பெண்ணாசையை தூண்டும் 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் சிக்கியுள்ளான்.

    சிறுவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள், ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
    • நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஜெய்சால்மர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விருந்தினர் மாளிகையின் மேனஜர் மகேந்திர பிரசாத் என்பவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.

    ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அவர் கசியவிட்ட குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13 அன்று ரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் 12-ம் நாளில் ஜூன் 24 அன்று போர்நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

    சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும், இஸ்ரேல், ஈரான், உளவாளிஇஸ்ரேலுக்காக உளவுப் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?
    • கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    பஹல்காம் தாக்குதல் சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்கு ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த காலங்களில், கேரள சுற்றுலாத் துறையின் விளம்பர நிகழ்வுகளுக்கு ஜோதி மல்ஹோத்ராவை அழைத்தது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,

    "பாகிஸ்தானுடன் தொடர்புள்ள ஒருவருக்கு கேரளாவில் ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது? அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?" என்று பாஜக தலைவர்கள் ஆளும் பினராயி விஜயன் அரசிடம் கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    ஜோதி மல்ஹோத்ராவைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். சுற்றுலா பிரச்சாரத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து பல பிரபலங்களை அழைத்ததாகவும், ஜோதி மல்ஹோத்ரா அவர்களில் ஒருவர் என்றும் அவர் கூறினார்.

    உளவு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த விளம்பர நிகழ்வு நடந்ததாக அவர் கூறினார்.

    • ஜோதி மல்ஹோத்ராவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
    • டெல்லியில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் ஜஸ்பீர் சிங் கலந்து கொண்டார்.

    பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பாக மேலும் ஒரு யூடியூபர் கைதாகி உள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். உளவு பார்த்ததாக முன்னர் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஜன்மஹால் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜஸ்பீர் சிங்கிற்கு 11 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

    டெல்லியில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் ஜஸ்பீர் சிங் கலந்து கொண்டார். 2020, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜஸ்பீர் சிங்கிடம் இருந்து மீட்கப்பட்ட மின்னணு சாதனங்களின் தடயவியல் பரிசோதனையில், பாகிஸ்தானுடனான தொடர்புகளைக் குறிக்கும் தொலைபேசி பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

    • ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக, வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.
    • தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்திக்கொண்டனர்.

    பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களுக்கு இந்திய போர்க்கப்பல்கள் பற்றிய தகவல்களை வழங்கியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீந்திர வர்மா (27) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, தானேயில் வசிக்கும் ரவீந்திர வர்மா ஒரு தனியார் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

    அவருக்கு 2024 ஆம் ஆண்டு பாயல் சர்மா மற்றும் இஸ்ப்ரீத் என்ற பேஸ்புக் கணக்குகளில் இருந்து Friend request கோரிக்கைகளைப் பெற்றார். இந்த பாகிஸ்தான் முகவர்கள் தங்களை இளம்பெண்களாக சர்மாவுக்கு அறிவுகப்டுத்தி அவருக்கு ஆசை காட்டி ஹனிட்ராப்பில் விழ வைத்தனர். 

    ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியராக இருந்ததால்,  வர்மா போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற அனுமதிக்கப்பட்டார்.

    அவர் தன்னுடன் ஒரு செல்போனையும் எடுத்துச் சென்றார். தனது பணிகளை முடித்த பிறகு, கப்பல்கள் பற்றிய ரகசிய தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் முகவர்களுக்கு வழங்குவார்.

    அவர் படங்கள் மற்றும் பிற வடிவமைப்புகளை வரைவதன் மூலம் தகவல்களை வழங்குவார். சில நேரங்களில் அவர் ரகசிய தகவல்களை ஆடியோ வடிவில் கூட தெரிவிப்பார். இந்த தகவல்களுக்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். 

    • மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
    • முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது.

    பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு கைது செய்தது.

    ராஜஸ்தானின் மேவாட் பகுதியில் உள்ள டீக் பகுதியில் காசிம் கைது செய்யப்பட்டார்.

    அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காசிம், ஆகஸ்ட் 2024 இல் ஒரு முறையும், மார்ச் 2025 இல் மீண்டும் ஒரு முறையும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முகவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார்.

    மேலும் விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்

    • நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
    • உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானுடன் உளவு பார்த்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து தேச துரோக சக்திகளுடன் ராகுல் தொடர்பில் உள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை தற்போது வெளியாகி உள்ளது.

    பல உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் ராகுல் மற்றும் ஜோதி மல்ஹோத்ராவின் புகைப்படங்களை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று அறிவித்துள்ளன.

    கூகிள் படத் தேடலின் படி, பல ஊடகங்கள் 2017 இல் அசல் புகைப்படத்தை வெளியிட்டன. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், ராகுலுடன் இருந்த நபர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அதிதி சிங் என்பது தெரியவந்தது.

    வைரலாகும் புகைப்படங்களில் ஜோதி மல்ஹோத்ரா அணிந்திருக்கும் அதே சேலையை அதிதி சிங் அணிந்திருப்பதைக் காணலாம். அவர்களும் அதே போஸில் காணப்படுகிறார்கள். பின்னணியில் இருப்பவர் கூட மாறவில்லை.

    ராகுல் மற்றும் அதிதி சிங் இருக்கும் புகைப்படம் பல வருடங்களுக்கு முந்தையது. இந்தப் புகைப்படத்தை அவர் 2017 இல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

    அதிதி சிங் ரேபரேலியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். 2021 இல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் ரேபரேலி சதார் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். ராகுல் காந்தியுடன் ஜோதி மல்கோத்ரா இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இதுபோன்று போலியாக பரபரப்படுகின்றன. 

    பாகிஸ்தானுடன் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    நாட்டைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் டேனிஷ் மே 13 அன்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

    உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • ஜோதி மல்ஹோத்ரா ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்

    இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

    பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.

    இதனையடுத்து, இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியதாக பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உள்பட 6 பேரை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

    ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா (34). இவர் 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார்.

    கைதான இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ரகசிய தகவல்களை உளவு பார்த்து சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் பாகிஸ்தானியருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடனும் ஜோதி நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று வந்துள்ளார்.

    அங்கிருந்து பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    ஜோதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது சமூக வலை தளத்தில் பாகிஸ்தானை அடிக்கடி புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் அவர் செய்துள்ள பதிவு ஒன்றில் லாகூரை பாகிஸ்தானின் கலாச்சார இதயம் என்று கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு 4 முறைக்கு மேல் சென்று வந்துள்ள தாகவும் பதிவிட்டுள்ளார்.

    இவரது யூடியூப்பிற்கு 3.2லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை 13.4 லட்சத் திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

    இவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 152-ன் கீழ் 3, 4, 5 ரகசிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இப்போது இந்த வழக்கு ஹிசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×