search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம்"

    • தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
    • இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு ’சல்யூட்டிங் மேஜர் முகுந்த்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள்ளில் வைரலானது.

    தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டுக்காக உயிர் தாகம் செய்தார். இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு 'சல்யூட்டிங் மேஜர் முகுந்த்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை, அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக் கொடி பறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் அறிவிப்பு.
    • மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

    யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே மற்றும் ஷியோக் நதிப் பள்ளத்தாக்குக்கு இடையே 17,688 அடி உயரமுள்ள சாங் லா கணவாயில் பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் மீட்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையை திரிசூல் பிரிவின் வீரர்கள் மேற்கொண்டதாக இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ப்யூரி கார்ப்ஸ் சமூக வளைதளத்தில் குறிப்பிடுகையில், "அவசர அழைப்பு வந்ததை அடுத்து, திரிசூல் பிரிவின் வீரர்கள் சாங் லாவின் பனிக்கட்டி பகுதியில் போக்குவரத்துத் தடையை அகற்றி, இரவில் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் போராடி, பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 80 நபர்களுக்கு நிவாரணம் அளித்தனர்" என்றிருந்தது.

    மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

    • மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என மாலத்தீவு அதிபர் திட்டவட்டம்.
    • சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, இந்திய ராணுவம் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.

    தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவியேற்றார்.

    சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார். மேலும், மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, சீன அதிபர் சீ சின்பிங்-யை சந்தித்து பேசினார். சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியா மாலத்தீவு இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.

    சுமார் 70-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.

    சீன ஆதரவாளர் முகமது முய்சு, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

    • எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
    • ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்

    ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பி சென்ற நிலையில், அவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, ஜன.9 அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    • 4 ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து உணவு வினியோகித்து வருகின்றன.
    • அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரையும் மீட்டனர்.

    தூத்துக்குடியில் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக் கிறது. இதனால் யாரும் அந்த கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை.

    154 ராணுவ வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இது தவிர பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ராணுவ வீரர்கள் சிறு சிறு ரப்பர் படகுகளில் உணவு, தண்ணீரை கொண்டு கிராமங்களில் வினியோகிக்கி றார்கள். ஆபத்தான இடங்களி லும் கயிறு கட்டி தண்ணீருடன் போராடி பணி செய்கி றார்கள். ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உயிரை யும் பணயம் வைத்து சென்று உதவி வருவதை பொது மக்கள் பாராட்டுகிறார்கள்.

    தரை வழியாக ராணுவ வீரர்கள் உதவி வரும் நிலை யில் கடற்படை மற்றும் விமானப் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர் களும் தொடர்ந்து உணவு வினியோ கித்து வருகின்றன.

    ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தாழ்வாக பறந்து உணவு பொட்ட லங்களை போடுகிறார்கள்.

    ஒரு இடத்தில் காலியான பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நின்றனர். அந்த பகுதியில் காற்றின் வேகமும் குறைவாக இருந்ததால் கைக்கு எட்டுவது போல் ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்க செய்து வாசலில் இருந்த படி வீரர் ஒருவர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.

    வைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மட்டும் 3.2 டன் உணவு பொட்டலங்களை வினியோகித்தனர். இன்றும் உணவு வினியோகத்தை தொடர்ந்து அவசர மருத்துவ உதவி தேவைப் பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரை யும் மீட்டனர்.

    • ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையின்போது இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

    குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

    ஒவ்வொரு பனிப்பொழிவுக்கும் சில இடங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது மற்றும் சில இடங்களில் குறைகிறது.

    முடிந்த வரையில், உயிரிழப்பு நேர்வதை குறைக்க முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
    • நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

    அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

    ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.

    இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.

    அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    • 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
    • மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து சுமார் 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். மேலும் கோரிக்கை மனுவை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.

    அதோடு இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதோடு கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

    இந்த நிலையில் மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சுராசந்த்பூரில் பாதுகாப்பு கிடங்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கலவர கும்பலால் எடுத்து செல்லப்பட்ட ஆயுதங்களை மீட்கும் பணிகளில் மணிப்பூர் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இதுவரை பள்ளத்தாக்கில் 1057 ஆயுதங்களும், 14 ஆயிரத்து 201 தோட்டாக்களும், மலை மாவட்டங்களில் 138 ஆயுதங்களும், 121 தோட்டாக்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    பிஷ்னுபூர் 2-வது ராணுவ ஆயுத கிடங்கில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 15 ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் போலீசாரிடம் இருந்து கும்பல் பறித்து சென்ற 4 ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 1,195 கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடி மருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர 10 ஆயிரம் வீரர்களை கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்த அவர்கள் வடகிழக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    வன்முறை சம்பவத்தின் போது 3 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்த தவுபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் போலீஸ் நிலைய பகுதியில் இதுவரை 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    லடாக்:

    1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர்.

    இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 24-வது கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய்திவாஸ்) நாட்டின் பல பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.

    பெரம்பலூர்:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.

    • தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை.

    மத்திய ஜப்பானின் கிபு பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ஒரு ராணுவ வீரர், சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    தற்காப்பு படையை சேர்ந்த அந்த வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்திய வீரரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய வீரர் பற்றியும், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×