search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Myanmar"

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
    • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.

    போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

    இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.

    தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.

    2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
    • வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு

    மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

    இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

    கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது.
    • நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் உறுதியளித்தது.

    இந்த நிலையில் மியான்மரில் அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது. 4-வது முறையாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கும், அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போதுமான பாதுகாப்பு இன்னும் தேவைப்படுவதால் அவசர கால சட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது. ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹவேயிங் கூறும்போது, நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது. வரவிருக்கும் தேர்தல்களை அவசரமாக நடத்தக் கூடாது என்பதால் எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

    மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய போது ஒரு வருடத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்பின் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி உள்ளார்.

    பாங்காக்:

    மியான்மரில் கடந்த 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் போராட்டங்கள், வன்முறை, அடக்குமுறை என அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், புத்த புனித நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து அரசியல் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவிக்கும் பணி இன்று தொடங்கியது. மன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் முழு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், 33 ஆண்டுகள் சிறைத்தண்டன பெற்ற ஆங் சான் சூகியின் பெயர் அந்த பட்டியலில் இருக்காது என தெரிகிறது.

    விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்களுக்கு புதிய குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனையுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • மியான்மரில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மியான்மர் ராணுவத்திற்கு சீனா ராணுவ உதவிகளை வழங்குவதாக தகவல்.

    இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம் ஒடுக்கியது.

    மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு சீனா மேலும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் ராணுவ உதவிகளை அளித்துள்ளதாக ஐரோப்பா ஆசியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் மியான்மரின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி 7 ஆயிரத்து 12 கைதிகளை விடுவிக்க இருப்பதாக ராணுவம் தெரிவித்தத. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் தெரிவித்து இருந்தார். தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    • சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

    மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல்.
    • துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

    மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் நடந்துள்ளது. இங்குள்ள புத்த மடாலயத்தில் உள்ள பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டிஆர்டி வேர்ல்ட் என்கிற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மற்றவர்கள் ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் இறந்தனர்.

    மேலும் இறந்தவர்களின் சடலங்கள் பின்னர் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2020 பிப்ரவரி 1-ம் தேதி இடம்பெற்ற சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எம்.அப்துல்லா எம்.பி. தெரிவித்தார்.
    • வெளியுறவுத்துறை மூலம் தொடர் முயற்சி

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கலந்துகொண்டு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நூல்களை பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது மிகவும் மரியாதை உண்டு. ஏனென்றால் இன்று சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய அவர்களின் பிள்ளைகள் தான் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

    அவர்களது பெற்றோர்கள் கூட வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது கிடையாது. பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மட்டுமே தான். அதை நல்ல முறையில் கற்றுக் கொடுப்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்று தலையாய கடமையாக செய்து வருகின்றனர்.அவ்வாறு மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதே சாதனை, தனியார் பள்ளியில் பாடம் கற்பது சாதனை அல்ல. அத்தகைய சாதனைக்குரியவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களே.

    தமிழகம் மூன்றில் ஒரு பங்கு வரிப்பணத்தை செலுத்தி வருகிறது தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருந்து வருகிறது. அதற்கு அடிப்படை காரணம் கல்வி கட்டமைப்பு தான். கல்வி உயர்வுதான் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணம். இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக தமிழகம் இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது . இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி பயின்று வருவது தமிழகத்தில்தான் என்று பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வளர்ச்சிப் பணிகள் இன்னும் ஆறு மாத காலங்களில் முழுமையாக முடித்து கொடுக்கப்படும்.

    அயல்நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் என்ற ஒரு வாரியத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. இந்த வாரியம் மூலம் அங்கு வேலை பார்ப்பவர்கள் மற்றும் இங்குள்ள அவர்களுடைய குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்தும் அதை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

    தமிழர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டில் சிக்கிக்கொள்வது என்பது புது விஷயம் அல்ல, இது அடிக்கடி நடந்துள்ளது. அவர்களை மீட்டும் உள்ளோம். அதேபோன்று தற்போது மியான்மரில் உள்ள 19 நபர்களை மீட்க தூதரகத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழக முதல்வரும் வெளியுறவுத் துறை மூலம் சீறிய முயற்சி எடுத்து வருகிறார்.விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

    தமிழகத்திலிருந்து அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற தனித்துறையை இந்த அரசு அமைந்தவுடன் அதற்கு தனி அமைச்சரை நியமித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
    யாங்கோன்:

    மியான்மர் கடற்கரையில் இன்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

    மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
    மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்கும் சில சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.



    அவற்றில் ஒரு சுரங்கத்தில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 55 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் இருந்தபோது ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
    ×