என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மியான்மர்"
- யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது.
- யாகி புயல் இந்த ஆண்டின் மிக வலிமையான புயல்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டது.
நேபிடோவ்:
தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.
இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.
இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
- புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை.
- யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்தநிலையில் யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது. புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
அங்கு சிக்கியுள்ளவர் களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், கிழக்கு ஷான் மாநிலத்திலும், தலைநகரான நய்பிடாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயல்-வெள்ளம் காரணமாக சுமார் 2.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளத்தால் 24 பாலங்கள், 375 பள்ளி கட்டிடங்கள், ஒரு புத்த மடாலயம், 5 அணைகள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளிநாடு உதவ வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு வெளிநாடு களைத் தொடர்பு கொள்ளு மாறு அதிகாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
- ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 2020-ல் அதிகாரத்தை கைப்பற்றிய போதிலும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர் ஆங் சான் சூகி. இவர் பல வருடங்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு 2020 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2021 பிப்ரவரியில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. அப்போது அவருக்கு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டுக்காவில் உள்ளார்.
இந்த நிலையில் யங்கூன் ஏரிக்கரையில் 1.9 ஏக்கர் நிலத்தில் இவரின் தாயார் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவருடைய மூத்த சசோதரர் உரிமை கொண்டாடினார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நீதிமன்றம் வீட்டை ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதற்கான அடிப்படை விலை 142 மில்லியன் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டது.
இன்று வீடு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. இதனால் வீடு ஏலம் விடப்படவில்லை. இவ்வாறு நடப்பது இது 2-வது முறையாகும்.
மியான்மர் சுதந்திர ஹீரோவா கருதப்படும் ஜெனரல் ஆங் சான் இவரது தந்தை. இவர் 1947-ல் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆங் சான் மனைவி (சூகி தாயார்) கின் கி-க்கு இந்த வீடு அரசால் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் கால ஸ்டைலில் இரண்டு மாடி வீடாகும்.
இந்த வீட்டில் ஆங் சான் சூகி 15 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிங்டன், ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் ஆகியோர் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.
- மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
- மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
- தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேபிடோவ்:
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
- ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.
போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.
தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.
2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
- ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.
மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.
இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
- கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
- வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு
மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.
இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.
கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.
- காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.
மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
- மியான்மரில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
- மியான்மர் ராணுவத்திற்கு சீனா ராணுவ உதவிகளை வழங்குவதாக தகவல்.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம் ஒடுக்கியது.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு சீனா மேலும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் ராணுவ உதவிகளை அளித்துள்ளதாக ஐரோப்பா ஆசியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மியான்மரின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி 7 ஆயிரத்து 12 கைதிகளை விடுவிக்க இருப்பதாக ராணுவம் தெரிவித்தத. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் தெரிவித்து இருந்தார். தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
- சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது.
- பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்படுகின்றனர்.
- வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.
தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர்.
வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதையடுத்து, மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்