என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prison sentence"

    • ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
    • ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.

    மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது. 

    • வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
    • தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.

    மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது 

    • அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    ஆறு வயது பாலஸ்தீன- அமெரிக்க சிறுவனை குத்திக் கொன்ற அமெரிக்க முதியவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

    இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவின் வசித்து வந்த ஜோசப் என்ற வயது 73 முதியவரின் வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.

    கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டின் அருகே அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஜோசப் மீது இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.
    • மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொல்லிமலை:

    சேந்தமங்கலம் அடுத்த செவிந்திப்பட்டியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ராஜேஷ்கண்ணின் மனைவி மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.

    சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். அந்த வழக்கு நேற்று சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையில் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார்.

    மணிகண்டன் உட்பட அவரது உறவினர்கள் 5 பேர் பல்வேறு வேலைகள் செய்து கொண்டு வீடுகளை நோட்டம் மிட்டு இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

    • அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது
    • இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். இந்த திட்டத்தின்படி மானாவாரியாகச் சாப்பிட்டு 102 கிலோ வரை தனது இயல்பான எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார்.

     

    அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது. இது ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கட்னுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் ராணுவ சேவையை தவிர்க்க முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

     

     

    இந்த குற்றத்துக்கு 3 வருடம் தண்டனை வழங்கலாம் என்ற நிலையில் முதல் முறையாக அவர் குற்றம் புரிந்துள்ளதாலும், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வேன் என்று வாக்குறுதி அளித்ததாலும் அவருக்கு 2 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

    மேலும் அவர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார் ஆனால் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார்

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி [52 வயது] கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார் நர்கிஸ் முகமதி. எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

    அவரை நோபல் பரிசுக் குழு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்த உரையாடலில் வீடியோவை நோபல் பரிசு குழு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

     

    எனது சக கைதிகளில் ஒருவர் சிறையில் ஆண்கள் வார்டில் இருந்த தனது கணவரை தொடர்புகொண்டார். அவர்கள் மூலம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தியை அறிந்துகொண்டோம். அது நம்பமுடியாத\தாக இருந்தது

    எவின் சிறைச்சாலை முழுவதும் இந்த செய்தி பரவியபோது பெண்கள் வார்டு "பெண் வாழ்க்கை சுதந்திரம்"[Woman Life Freedom] என்ற முழக்கத்தால் நிறைந்ததை முகமதி அந்த வீடியோவில் நினைவு கூர்ந்தார். இந்த வீடியோவில் பச்சை நிற டாப்ஸ் அணிந்திருந்த முகமதி தலையில் எந்தவித உடையையும் [ஹிஜாப்] அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முகம்மதியின் நிபந்தனையற்ற நிரந்தர விடுதலைக்கு உளமெங்கிலும் இருந்து சமூக செயல்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    • அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
    • ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங்.

    இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு (32) நியூசிலாந்து நாட்டில் தற்போது 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தில் 2023 இல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.

    இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பால்தேஜ் சிங் 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

     

    மெத்தபெட்டமைன் என்றால் என்ன? 

    இது "மெத்" அல்லது "படிக மெத்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பாதித்து மூளையில் டோபமைனின் அளவை அதிகரித்து, ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    இது பழக்கமாக மாறி ஆபத்து விளைவிக்கக்கூடியது. இதன் பயன்பாடு, மனநல கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், தூக்கக் கலக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழிவகுக்கும்.    

    • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
    • 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(27) மீது கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தரை(27)குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     32 ஆண்டுகள் சிறை தண்டனையை மாத்தர் எதிர்கொள்கிறார். ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து அவருக்கான தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணையின்போது மாத்தர்  எதுவும் பேச மறுத்துவிட்டார்.

    விசாரணை முழுவதும், நீதிமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர் "சுதந்திர பாலஸ்தீனம்" என்று மட்டுமே கூறினார்.

    இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 2022 ஆகஸ்ட் 12 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது மேடையில் எரிய ஹாடி மாத்தர், சல்மான் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

    சம்பத்தின்பின் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

    இந்த தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தனது வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

     

    ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என்று கூறப்படுகிறது. இந்த நாவலில் சல்மான் ருஷ்டி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் சில பகுதிகளை கற்பனையாக சித்தரித்துள்ளதே எதிர்ப்புக்கு காரணமாகும். 

    • 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
    • வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் ஷீட்டில் அவர்களின் தோற்றத்துக்கு மதிப்பெண் கொடுத்து வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (43). ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.

    இதற்கிடையே போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர். அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் சீட் ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள், அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பெண் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் அவரது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், 2 பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    சேலம்:

    கொளத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சசிகலா(வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தனர். அதில், கோட்டையூர் பகுதியை சேர்ந்த நல்லம்மாள்(58), பாப்பா(35) ஆகியோர் சசிகலாவின் நடத்தை குறித்து தகாத வார்த்தையால் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். 

    அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக நல்லம்மாள், பாப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நல்லம்மாள், பாப்பா ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
    ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.

    தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
    நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை கோர்ட்டு எச்சரித்து விடுதலை செய்தது. #NagapattinamFishermen
    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா என்பவரது படகை நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 45) வாடகைக்கு எடுத்தார்.

    இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.

    இதேபோல கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப்(50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம் பாடியை சேர்ந்த மாதேஷ்(19) வாடகைக்கு எடுத்து அந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ஆழ்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர்.

    பின்னர் அவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்று காங்கேசன்துறை அருகேயுள்ள காரைநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மாவட்ட மீனவர்களை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி, ‘‘நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற செப்டம்பர் 29-ந்தேதிக்குள் படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்து படகுகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இதையடுத்து நாகை மீனவர்கள் 7 பேரும் நேற்று மாலை சேதுபாவாசத்திரம் திரும்பினர்.

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரும் திரும்பி வந்ததால் மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #NagapattinamFishermen
    ×